தலைமைத்துவ மாற்றம் குறித்து தீர்மானங்கள் எதுவும் இல்லை

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவம் தொடர்பில் கூறப்படும் கருத்துக்கள் முதிர்ச்சியற்றவையாகும். தலைமைத்துவ மாற்றம் குறித்து எவ்வித தீர்மானங்களும் இதுவரை எடுக்கப்படவில்லையென ஐ.தே.கவின் சிரேஷ்ட உறுப்பினரும் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

எனினும் ஐ.தே.கவின்

 

தலைமைத்துவத்தில் 25 வருடங்களின் பின்னர் மாற்றம் ஏற்படப் போவதாகவும் சஜித் பிரேமதாஷவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பெற்றுக்கொடுத்ததைப் போன்று தலைமைத்துவப் பதவியையும் பெற்றுக்கொடுப்போமென பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா கூறினார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவம் விரைவில் மாற்றமடையுமென சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவான தரப்பினர் கூறிவருவதுடன் தலைமைத்துவத்தில் மாற்றம் ஏற்படாதென தற்போதைய தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவான தரப்பினரும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்தக் கருத்துத் தொடர்பில்முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவிடம் வினவிய போது,

ஒவ்வொருவரும் அவர்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அஜித் பி பெரேராவின் கருத்துக்கள் தொடர்பில் அவரிடம்தான் கேட்க வேண்டும். ஐ.தே.கவின் தலைமைத்துவம் அது குறித்து எவ்வித தீர்மானங்களும் இதுவரை எடுக்கவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம் என்றார்.

இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர்அஜித் பி பெரேரா கருத்து வெளியிடுகையில்,

ஐ.தே.கவின் தலைமைத்துவத்தை சஜித் பிரேமதாசவுக்கு பெற்றுக்கொடுக்கும் போராட்டம் இன்று முதல் தொடங்கவுள்ளது. தலைமைத்துவத்தில் 25 வருடங்களின் பின்னர் மாற்றம் ஏற்படவுள்ளது. கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் முதல் அனைவரும் இதற்கு ஆதரவளிக்க வேண்டும்.

எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாசவை நியமித்துள்ளோம். அதேபோன்று கட்சியின் தலைவராகவும் அவரை அடுத்துவரும் சில நாட்களில் நியமிக்க நடவடிக்கைகளை எடுப்போம் என்றார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Mon, 12/09/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை