கிரகணத்தின் உச்ச நிலையில் யாழ். குடா வெப்பநிலை வீழ்ச்சி; சூரியனின் பிரகாசத்தில் மங்கல்

கங்கண மற்றும் பகுதியளவிலான சூரிய கிரகணத்தை அவதானிப்பதில் வடக்கு கிழக்கு உட்பட நாடெங்கிலும் மக்கள் நேற்று பெரிதும் ஆர்வத்தை வெளிப்படுத்தினர்.  

கடந்த சில வாரங்களாக நாட்டில் மழைவீழ்ச்சியுடன் கூடிய காலநிலை நீடித்து வருவதால் மழைவீழ்ச்சி மற்றும் மேகக்கூட்டம் ஏற்பட்டு இந்த அரிய சூரிய கிரகணத்தை அவதானிப்பதில் அசெளகரியங்களை ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சம் உள்நாட்டு விஞ்ஞானிகளிடமும் அவதானிப்பாளர்களிடமும் நிலவிய போதிலும் அவ்வாறான அசௌகரிய நிலைமை ஏற்படவில்லை.  

சூரியக் கிரகணத்தை தெளிவாக அவதானிக்க முடிந்த வடபகுதி நேற்று காலையில் மழைவீழ்ச்சியோ, மேகக்கூட்டங்களோ இன்றி ஆகாயம் தெளிவாகவும் சூரியன் பிரகாசமாகவும் காணப்பட்டதாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பௌதிகவியல் பீட சிரேஷ்ட விரிவுரையாளர்  புண்ணியமூர்த்தி ரவிராஜன் தெரிவித்தார். இந்த சூரிய கிரகணம் இலங்கை நேரப்படி நேற்று காலை 8.09மணியளவில் ஆரம்பமானது. அதன் உச்ச நிலை காலை 9.35முதல் காலை 9.37வரையான மூன்று நிமிடங்களும் 15வினாடிகளும் காணப்பட்டது. ஆனால் முழு சூரிய கிரகணமும் முற்பகல்11.22வரையான மூன்று மணித்தியாலயங்களும் 15நிமிடங்களும் நீடித்தன எனவும் அவர் குறிப்பிட்டார்.  

இச்சூரியக் கிரகணம் ஆரம்பமான போது யாழ். குடாநாட்டின் வெப்பநிலை 35பாகை செல்சியஸாக காணப்பட்டது. ஆனாலும் கிரகண வேளையில் சூரியன் கட்டம் கட்டமாக பிரகாசத்தை இழந்து கங்கண மற்றும் பகுதியளவிலான கிரகணத்தின் உச்ச நிலையை அடைந்த சமயம் அந்த வெப்பநிலை 26பாகை செல்லியஸுக்கு வீழச்சி அடைந்தது. இச்சமயம் வானிலை மாலை 6.00மணிக்கும் மாலை 7.00மணிக்கும் இடைப்பட்டது போன்று காணப்பட்டது என்றும் அவர் கூறினார்.  

இந்தக் காலப்பகுதியில் சூரியனின் பிரகாசம் மங்கலான நிலையில் காணப்பட்டதோடு மிதமான குளிர்த்தன்மையையும் மக்களால் பரவலாக உணர முடிந்துள்ளது.

இதேவேளை இச்சூரிய கிரகணத்தை அவதானிப்பதற்கான முகாம்கள் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் திருநெல்வேலி மைதானத்திலும், கிளிநொச்சி பொறியியல் பீட நிர்வாகக் கட்டத்திற்கு அருகிலும் யாழ். பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் அமைக்கப்பட்டிருந்தது.  

அதேநேரம் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் மாணவர்களும் இரணைமடுவிலும், நவீன தொழில்நுட்பங்களுக்கான ஆதர் சீ கிளார்க் நிலையம் மன்னாரிலும், இராணுவத்தினர் முல்லைத்தீவிலும் விஷேட அவதானிப்பு முகாம்களை அமைத்திருந்தனர். இந்த முகாம்களின் ஊடாக நூற்றுக்கணக்கானவர்கள் இந்த அரிய வகை சூரிய கிரகணத்தை அவதானித்த அதேநேரம், யாழ்ப்பாண முகாமில் மாத்திரம் மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் இக்கிரகணத்தை அவதானித்ததாகவும் பேராசிரியர் ரவிராஜன் குறிப்பிட்டார்.  

இக்கிரகணத்தை அவதானிப்பதில் ஐக்கிய அமெரிக்காவிலிருந்து ஜந்து விஞ்ஞானிகளும் உள்நாட்டு விஞ்ஞானிகளும் அடங்கலாக 10அமெரிக்க பிரதிநிதிகள், 03ரஷ்ய பிரதிநதிகள், ஜரோப்பிய பிரதிநிதிகள், உள்நாட்டில் ஆர்வம் கொண்டவர்களும் கலந்து கொண்டதாக அவர் மேலும் கூறினார்.  

இதேவேளை காலி, கண்டி, கொழும்பு, தம்புள்ளை, அநுராதபுரம் போன்ற பல பிரதேசங்களைச் சேர்ந்த மக்களும் இக்கிரகணத்தை அவதானிப்பதில் பெரிதும் காட்டினர். என்றாலும் வடபகுதி தவிர்ந்த நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பகுதியளவிலான கிரகணத்தை அவதானிக்க முடிந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.  

இந்த அரிய வகை சூரிய கிரகணத்தை இதன் பின்னர் 2031 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் திகதி தான் அவதானிக்க முடியும் என விஞ்ஞானிகள் சட்டிக்காட்டியுள்ளனர். 

மர்லின் மரிக்கார்

Fri, 12/27/2019 - 08:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை