பிலிப்பைன்ஸை தாக்கிய பலமான சூறாவளியால் பலரும் உயிரிழப்பு

கிறிஸ்மஸ் தினத்தில் மத்திய பிலிப்பைன்ஸை தாக்கிய சக்திவாய்ந்த சூறாவளியால் 16பேர் உயிழந்திருப்பதோடு, பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.  

உர்சுலா என்று அழைக்கப்படும் பான்போன் சூறாவளி மணிக்கு 190கிலோமீற்றர் வேகத்தில் வீசியதோடு பிலிப்பைன்ஸின் பல தீவுகளிலும் பல தடவைகள் கரையைக் கடந்ததாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.  

இதனால் கிறிஸ்மஸ் பண்டிகைக்காக வீடு திரும்ப எதிர்பார்த்த பல்லாயிரக்கணக்கான மக்கள் துறைமுகங்களில் நிர்க்கதியாகியுள்ளனர். கிறிஸ்துமஸ் விழாவையொட்டி குடும்பத்தினருடன் வீடுகளுக்கு செல்ல முயன்றனர். எனினும் படகு சேவைகள் இல்லாததால் அவர்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். 

2013இல் பெரும் பேரழிவை ஏற்படுத்திய ஹையான் சூறாவளி தாக்கிய பிராந்தியங்களையே இந்த சூறாவளி சூறையாடியுள்ளது.  

அந்த ஆண்டு நவம்பர் மாதம் தாக்கிய ஹையான் சூறாவளியால் 6,000க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர். பிலிப்பைன்ஸை தாக்கிய அதிக உயிரிழப்புக் கொண்ட சூறாவளியாகவும் அது இருந்தது. மணிக்கு 310கிலோமீற்றர் வேகத்தில் வீசிய அந்த சூறாவளியானது தரையை கடந்த மிகச் சக்திவாய்ந்த சூறாவளியாகவும் இருந்தது.  

பான்பான் சூறாவளி கடந்த செவ்வாய்க்கிழமை இரவு தரையை தாக்க ஆரம்பித்தபோதும் கிரிஸ்மஸ் தினத்திலும் மத்திய பிலிப்பைன்ஸின் பல தீவுகளையும் தொடர்ச்சியாக தாக்கியது. எனினும் இந்த சூறாவளியால் ஏற்பட்டிருக்கும் சேதங்கள் பற்றி நேற்றைய தினமாகும்போதே முழுமையாக தெரியவர ஆரம்பித்துள்ளது.  

மூன்று வயது சிறுவன் ஒருவன் உட்பட 16பேர் இதுவரை உயிரிழந்திருப்பதாக உள்ளுர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இலொய்லோ மற்றும் காபிஸ் மாகாணங்களிலேயே அதிக உயிரிழப்புகள் இடம்பெற்றுள்ளன.  

உயர்வான நிலப்பகுதியை நோக்கி தப்பிச் செல்ல முயன்றதோடு திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி குடும்பம் ஒன்று உயிரிழந்திருப்பதாக பிலிப்பைன்ஸ் செய்தி நிறுவனம் ஒன்று குறிப்பிட்டுள்ளது. இலொய்லோ மாகாணத்தில் குறைந்தது 12பேர் காணாமல்போயிருப்பதாக அது குறிப்பிட்டுள்ளது.  

16,000க்கும் அதிகமானோர் தற்காலிக முகாம்களில் தஞ்சமடைந்திருப்பதாக அதிகாரிகள் கூறினர். வெள்ளம், மின்தடை பல பகுதிகளில் ஏற்பட்டிருப்பதோடு, மரங்கள் வேரோடு சாய்ந்ததாய்த் தெரிவிக்கப்பட்டது. 

பிரபல சுற்றுலா தளமாக இருக்கும் பராகெய் பகுதியிலும் அழிவுகள் ஏற்பட்டுள்ளபோதும் அதன் விபரம் இன்னும் முழுமையாக வெளிவரவில்லை. ஒதுக்குப்புறமான பகுதிகளை இன்னும் நெருங்க முடியவில்லை என்று மீட்புப் பணியாளர்கள் கூறியுள்ளனர். 

பிலிப்பைன்ஸை இந்த ஆண்டு தாக்கிய 21ஆவது சூறாவளி பான்போன் ஆகும். பிலிப்பைன்ஸை இம்மாத ஆரம்பத்தில் கம்முரி புயல், தென் பகுதிகளில் தாக்கியது. இதன் காரணமாக கடற்கரைப் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. கனமழை காரணமாக பல பகுதிகளில் நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கம்முரி புயல் காரணமாக இதுவரை 10 பேர் பலியாகினர்.    

Fri, 12/27/2019 - 10:43


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை