அர்ஜுன் மகேந்திரனை நாடு கடத்தும் ஆவணங்கள் சிங்கப்பூரில் பரிசீலிப்பு

இலங்கை மத்திய வங்கியின் பிணை முறி விவகாரம் தொடர்பாக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை நாடு கடத்துவது பற்றி இலங்கை அரசாங்கம் அனுப்பிய ஆவணங்கள் சிங்கப்பூரின் சட்ட மாஅதிபர் திணைக்களத்தில் பரிசீலிக்கப்பட்டு வருவதாக சட்ட மாஅதிபர் நேற்று நிரந்தர நீதாய நீதிமன்றத்துக்கு தெரிவித்தார்.

அர்ஜுன் மகேந்திரனின் நாடு கடத்தல் தொடர்பான முன்னேற்றம் குறித்து இலங்கை மற்றும் சிங்கப்பூரின் சட்ட மாஅதிபர் திணைக்களங்கள் கிரமமான மின்னஞ்சல் பரிமாற்றங்களில் ஈடுபட்டிருப்பதாக சட்டமா அதிபரின் சார்பாக நீதிமன்றத்தில் தோன்றிய மேலதிக சொலிஸிஸ்டர் ஜெனரல் பரிந்த ரணசிங்க தெரிவித்தார்.

இலங்கை மத்திய வங்கி பிணை முறி ஊழல் தொடர்பாக தேடப்படும் நபரான அர்ஜுன் மகேந்திரன் தற்போது நீதிமன்றங்களில் சமுகமளிக்காது வெளிநாடுகளில் மறைந்திருப்பதால்  அவரைக் கைது செய்ய இன்ரபோல் சர்வதேச பொலிஸின் ஊடாக ஆங்கிலத்தில் எழுதப்பட்ட பிடியாணையொன்றை நிரந்தர நீதாய நீதிமன்றம் ஏற்கனவே வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மத்திய வங்கி பிணை முறி ஊழல் வழக்கின் 10ஆவது சந்தேக நபரான அஜ்ஹான் கார்டியா புஞ்சிஹேவா என்பவரை எதிர்வரும் மார்ச் 27ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதியரசர்களான சம்பத் அபேகூன், சம்பத் விஜேரத்ன மற்றும் சம்பா ஜானகி ராஜரட்ன ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர்.

எனினும் அவர் தற்போது சிங்கப்பூரில் வசித்து வருவதாகவும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யமுடியாமல் இருப்பதாகவும் நீதிமன்றுக்கு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு எதிர்வரும் மார்ச் 31ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Thu, 12/05/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை