கொழும்பிலும் மலையகத்திலும் கூட்டமைப்பு என்ன சாதிக்கப் போகிறது?

கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவர்கள்  வானம் ஏறி வைகுண்டம் போக முடியுமா?

வடக்கு, கிழக்கு மாகாணங்களிலேயே முறையாக அரசியல் செய்யமுடியாமல் திணறி திண்டாடும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, கொழும்பிலும் மலையகத்திலும் போட்டியிட்டு எதை சாதிக்கபோகின்றது? கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவர்கள் வானம் ஏறி வைகுண்டம் போக முடியுமா?” என ஐக்கிய தேசியக்கட்சியின் கொழும்பு மாவட்ட பிரதான அமைப்பாளரும், மேல்மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான சி.வை.பி.ராம் கேள்வி எழுப்பியுள்ளார்.

2020 இல் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெற்கில் களமிறங்கினால் அது சிங்கள மக்கள் மத்தியில் தவறான விம்பத்தை உருவாக்கிவிடும் என்றும், இதனால் தெற்கில் வாழும் தமிழ் மக்களின் இருப்புக்கு பாதிப்பு ஏற்படலாம் என்றும் ராம் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொதுத்தேர்தலில் கொழும்பு, கம்பஹா,  நுவரெலியா மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களில் போட்டியிடுவது தொடர்பில் பரீசிலிக்கப்பட்டுவருவதாக இலங்கை தமிழ் அரசுக் கட்சி தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் விடுக்கப்பட்டுள்ள அறிவிப்புதொடர்பில் ஊடகங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

“தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் எனக்கூறிக்கொண்டு அரசியல் நடத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு காத்திரமான சேவைகளை கடந்த காலங்களில் வழங்கமுடிந்ததா? இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியாக செயற்படும் வாய்ப்புகூட அக்கட்சிக்கு கிடைத்திருந்தது. எனினும், குறிப்பிட்டு கூறுமளவுக்கு அப்பதவி ஊடாக மக்களுக்கு சேவைகளை கூட்டமைப்பினர் செய்யவில்லை என்பதே கசப்பான உண்மையாகும்.

குறிப்பாக 2019 ஒக்டோபரில் ஆட்சிகவிழ்ப்பு சூழ்ச்சி நடந்தபோது, ஐக்கிய தேசியக்கட்சியின் குடுமி, கூட்டமைப்பின் பிடிக்குள்தான் இருந்தது.கூட்டமைப்பினர் எதை கேட்டாலும் செய்தாக வேண்டும் என்ற கட்டாயநிலை ஏற்பட்டது. ஆனால், அலரிமாளிகைக்குவந்து, ஐ.தே.க. உறுப்பினர்களுடன் கொஞ்சிபேசி, உண்டு மகிழ்ந்த கூட்டமைப்பின் உயர்மட்ட பிரமுகர்கள், கிடைத்த அரிய வாய்ப்பைக்கூட உரிய வகையில் பயன்படுத்தவில்லை. சுயநல அரசியலுக்காக, மக்களுக்காக பேரம்பேசுவதைக்கூட தவிர்த்தே வந்தனர்.

அத்துடன், கொழும்பு, கம்பஹா, நுவரெலியா, பதுளை போன்ற பகுதிகளில் வாழும் தமிழ் மக்களுக்காக, கூட்டமைப்பு என்ன செய்துள்ளது?அம்மக்களுக்காக பாராளுமன்றத்தில் பிரேரணைகள் முன்வைக்கப்பட்டனவா?விவாதங்கள் கோரப்பட்டனவா? இல்லை என்பதே மிகப்பொருத்தமான பதிலாகும்.

இப்படி எதையுமே செய்யாமல் தமிழ் மக்களை வாக்களிப்பு இயந்திரமாக மட்டும் பயன்படுத்த நினைப்பது தவறான விடயமாகும்.

 

Mon, 12/30/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை