டொக்டர் ஷாபி தொடர்பில் புதிய சி.ஐ.டி விசாரணை

குருநாகல் நீதிமன்றுக்கு சி.ஐ.டி அறிவிப்பு

வைத்தியர் ஷாபி தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் புதிய குழு ஒன்றை நியமித்துள்ளதாக குற்றப் புலனாய்வு பிரிவு குருநாகல் நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்தது.

அத்துடன் வைத்தியர் ஷாபி தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களிடம் மீண்டும் வாக்குமூலங்களை பெற்றுக் கொள்ளுமாறு நீதவான சம்பத் ​ேஹவாவசம் குற்றப் புலனாய்வு பிரிவுக்கு உத்தரவிட்டார். குருநாகல் மருத்துவமனையில் பணியாற்றிய டொக்டர் ஷாபிக்கு எதிரான சிசேரியன் கருத்தடை சத்திரசிகிச்சை விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை நேற்று குருணாகல் நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதன் போது குற்றஞ்சாட்டப்பட்ட டொக்டர் ஷாபியும் ஆஜரானார்.

விசாரணை தொடர்பில் சி.ஐ.டி அறிக்கையொன்றை சமர்ப்பித்ததோடு விசாரணை முன்னேற்றம் குறித்தும் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டது. இதேவேளை, வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகள் ஜனவரி மாதம் 16 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

டொக்டர் ஷாபி நூற்றுக்கணக்கான பெண்களுக்கு முறையற்ற கருத்தடை சத்திர சிகிச்சை செய்ததாக பரவலாக குற்றஞ்சாட்டப்பட்டது.இதனால் பெரும் சர்ச்சை எழுந்ததோடு கடந்த ஆட்சியில் இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது.ஆனால் பக்கசார்பான விசாரணை நடந்ததாக தற்பொழுது குற்றச்சாட்டு எழுந்துள்ளமை தெரிந்ததே. (பா)

வாரியபொல தினகரன் நிருபர்

Fri, 12/13/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை