இலங்கைக்கு மேலும் மூன்று தங்கம்

10000 மீற்றரில்  சண்முகேஸ்வரனுக்கு வெள்ளி பதக்கம்

தெற்காசிய  விளையாட்டுப் போட்டி

நேபாளத்தில் நடைபெற்றுவரும் 13ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கை மேலும் பல பதக்கங்களை வென்றதோடு மெய்வல்லுநர் போட்டிகளில் ஒரு தங்கம் நான்கு வெள்ளிப் பதக்கங்களை வெல்ல முடிந்தது.

பெண்களுக்கான நீளம் பாய்தல் போட்டியில் லக்சினி சாரங்கி தங்கப் பதக்கம் வென்றதோடு ஆண்களுக்கான 10000 மீற்றர் போட்டியில் மலையகத்தைச் சேர்ந்த குமார் சண்முகேஸ்வரன் வெள்ளிப்பதக்கம் வென்றார்.

மறுபுறம் வுஷு மற்றும் டைக்கொண்டோ போட்டிகளிலும் இலங்கை நேற்றுமுன்தினம் தங்கப்பதக்கங்களை அள்ளியது.

இதில் மெய்வல்லுநர் போட்டிகளின் இரண்டாவது நாளான நேற்று ஆண்களுக்கான 10000 மீற்றர் ஓட்டப்போட்டி, ஆண் மற்றும் பெண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப்போட்டி, ஆண், பெண்களுக்கான நீளம்பாய்தல் போட்டி, பரிதிவட்டம் எறிதால் போட்டிகள் இடம்பெற்றன.

ஏழு நாடுகள் பங்கேற்றிருக்கும் தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் மெய்வல்லுநர் போட்டிகள் காத்மண்டுவின் தசராத் ரங்கசால மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

பெண்களுக்கான நீளம் பாய்தல் போட்டியில் பதக்க எதிர்பார்ப்பாக இருந்த விதூஷா லக்ஷானி சுகயீனம் காரணமாக பங்கேற்க முடியாத நிலையில் அவருக்கு முப்பாய்ச்சல் போட்டிக்காக ஓய்வு அளிக்கப்பட்டது. அவருக்கு பதிலாகவே லக்சினி சுரங்கி பங்கேற்றார்.

எனினும் அவர் 6.38 மீற்றர் நீளம் பாய்ந்து முதலிடத்தை பெற்று தங்கம் வென்றார். அதேபோன்று தனது தனிப்பட்ட சாதனையை முறியடித்து அஞ்சனி உத்பலா 6.11 மீற்றர் தூரம் பாய்ந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார். இதில் இந்திய வீராங்கனை சந்திரா பாபு வெண்கலம் வென்றார். இதேவேளை 10000 மீற்றர் ஓட்டப்போட்டியில் தேசிய சம்பியனான ஹற்றனைச் சேர்ந்த சண்முகேஸ்வரன் கடுமையாக போராடி வெள்ளிப் பதக்கத்தை வென்றார். அவர் 30 நிமிடம் 49.20 வினாடிகளில் போட்டியை முடித்துக் கொண்டார். இதன்போது நேபாள வீரர் தீபக் அதிகாரியிடம் இருந்து கடும் சவாலை எதிர்கொண்டபோதும் சண்முகேஸ்வரனால் அவரை பின்தள்ள முடிந்தது.

சண்முகேஸ்வரன் சர்வதேச போட்டிகளில் இலங்கைக்காக பதக்கம் வெல்வது இது இரண்டாவது முறையாகும். 2018 ஆம் ஆண்டு வியட்நாம் பகிரங்க மெய்வல்லுநர் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றிருந்தார். எனினும் இந்திய வீரர் சுரேஷ் குமார் அதிக இடைவெளியுடன் 29 நிமிடம் 33.61 வினாடிகளில் போட்டியை முடித்து தங்கப்பதக்கம் வென்றார். ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப்போட்டியிலும் இலங்கை மற்றொரு வெள்ளிப் பதக்கத்தை வென்றது. 5ஆவது வரிசையில் ஓடிய வினோஜ் சுரஞ்சய 21.19 வினாடிகளில் போட்டித் தூரத்தை முடித்து இரண்டாவது இடத்தைப் பிடித்தார். பாகிஸ்தானின் உசைன் ரெஹ்மான் 21.15 வினாடிகளில் போட்டியை முடித்து முதலிடத்தைப் பிடித்ததோடு மாலைதீவு வீரர் சாயித் ஹசன் மூன்றாம் இடத்திற்கு வந்தார். இதேவேளை, பெண்களுக்கான பரிதிவட்டம் எறிதல் போட்டியில் இலங்கையின் இஷாரி மதுரங்கி வெண்கலப் பதக்கம் ஒன்றை வென்றார். 41.29 மீற்றர் தூரம் பாய்ந்து அவர் அந்தப் பதக்கத்தை வென்றார். இதில் 49.85 மீற்றர் தூரம் எறிந்த இந்தியாவின் நவ்ஜீத் கவுர் தங்கப்பதக்கத்தை வென்றதோடு இந்தியாவின் சுராவி பிஸ்வால் வெள்ளிப்பதக்கம் வென்றார்.

இதன்படி மெய்வல்லுநர் போட்டிகளில் இலங்கை நேற்று ஒரு தங்கம் மூன்று வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கங்களை வென்றது. இதனிடையே வுஷு போட்டிகளில் இலங்கைக்கு மற்றொரு தங்கப் பதக்கத்தை வெல்ல தரிந்து நாமல் அனுராதவினால் முடிந்தது. ஆண்களுக்கான டவுலு டாய்ஜி ஜியான் போட்டியில் 18.90 புள்ளிகளைப் பெற்று அவர் தங்கத்தை வென்றார்.

அதேபோன்று டைக்கொண்டோ போட்டியில் 63 கி.கி. பிரிவில் இந்திய வீரரை தோற்கடித்து சாலிந்த சம்பத் மற்றொரு தங்கப்பதக்கத்தை வென்றார். கராத்தே குமித்தே ஒற்றையர் பிரிவில் லக்மால் சில்வா, குமித்தே ஆண்கள் அணி மற்றும் டென்னிஸ் குழுநிலை போட்டியில் இலங்கை பெண்கள் அணி வெள்ளிப் பதக்கம் வென்றது. நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான ரி-20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி பூட்டானை 109 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலகுவாக தோற்கடித்ததோடு மகளிர் கிரிக்கெட் அணி மாலைதீவை 249 ஓட்டங்களால் தோற்கடித்தது.

இதேவேளை மெய்வல்லுநர் போட்டிகளில் மேலும் பதக்கங்களுக்கான பல போட்டிகள் இன்று நடைபெறவுள்ளன. 110 மீற்றர் தடைதாண்டி ஆடவர் மற்றும் மகளிர் பிரிவுகளின் போட்டிகள் இன்று இடம்பெறவிருப்பதோடு ஈட்டி எறிதல், முப்பாய்ச்சல், 400 மீற்றர் ஓட்டப்போட்டிகளும் இன்று நடைபெறுவுள்ளன.

தெற்காசிய விளையாட்டுப் போட்டியின் ஐந்தாவது நாளான இன்று நீச்சலோட்டப்போட்டிகள் ஆரம்பமாகவுள்ளன. நீச்சல் தடாகங்களின் நிர்மாணப் பணிகள் கடைசி நேரத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் இலங்கை வீர, வீராங்கனைகளுக்கு பயிற்சி பெறுவதில் சிரமம் ஏற்பட்டதோடு இங்கு நிலவும் குளிரான காலநிலையும் அதிக தாக்கம் செலுத்த வாய்ப்பு உள்ளது.

அதேபோன்று இலங்கை பதக்கங்களை எதிர்பார்க்கும் பளுதூக்கும் போட்டிகளும் இன்று ஆரம்பமாகவுள்ளது. தவிர கடற்கரை கரப்பந்தாட்டம், அம்பெறிதல், கூடைப்பந்தாட்ட போட்டிகளும் இன்று ஆரம்பமாகின்றன.

இதன்படி தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் நான்காவது நாளான இன்று இலங்கை 3 தங்கப்பதக்கங்களை வென்று மொத்தம் 8 தங்கங்களுடன் பதக்கப்பட்டியலில் நேபாளம், இந்தியாவுக்கு அடுத்து 3 ஆவது இடத்தில் நீடிக்கிறது.

Thu, 12/05/2019 - 06:00


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக