வடக்கு, மேல், வடமத்தியில் தொடர்ந்தும் மழை பெய்யும்

பாதிக்கப்பட்டோருக்கான நிவாரண பணி தொடர்ந்தும் முன்னெடுப்பு

ஊவா, மேல், தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் எதிர்வரும் சில தினங்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,  அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்யும். சப்ரகமுவ, மேல்,மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் பல இடங்களில் பிற்பகலில் இடியுடன் கூடிய மழை பெய்யும்.

இடி, மின்னல் தாக்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.

இதேவேளை, காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை வரையான கடற்பரப்புகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நீர்கொழும்பிலிருந்து காலி ஊடாக மாத்தறை வரையான கடற்பரப்புகளில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும்.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வட,கிழக்கு திசையிலிருந்து வீசுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30 தொடக்கம் 40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

காங்கேசன் துறையிலிருந்து மன்னார் மற்றும் புத்தளம் ஊடாக கொழும்பு வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 தொடக்கம் 55 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும். கடல் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 70 தொடக்கம் 80 கிலோ மீற்றர் வரை பலமான காற்று வீசுவதுடன் கடற் பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டது.

இதேவேளை சீரற்ற காலநிலை காரணமாக 46,959 குடும்பங்களைச் சேர்ந்த 161420 பேர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. வடக்கு, கிழக்கு மாகாணங்களிலேயே அதிகமானோர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் கூறியுள்ளதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண பணிகளை தொடர்ந்தும் முன்னெடுத்து வருவதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதி பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி குறிப்பிட்டார்.

 

Sat, 12/14/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை