மட்டு. கிரானில் பாதிக்கப்பட்ட மக்களை யோகேஸ்வரன் எம்.பி தோணியில் சென்று பார்வை

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் நேரில் சென்று பார்வையிட்டு உதவிகளை வழங்கி வைத்தார்.

வாழைச்சேனை கிண்ணையடி துறையில் இருந்து படகு மூலம் முருகன்தீவு, சாராவெளி, பிரம்படித்தீவு ஆகிய இடங்களில் பாதிக்கப்பட்டு இடைத்தங்கல் முகாம் மற்றும் வீடுகளில் தங்கியுள்ள மக்களை பார்வையிட்டார்.

குளம் திறக்கப்பட்டதால் எண்பது வீதம் நீரால் மூழ்கியுள்ளது. இதனால் விவசாய நிலங்கள் ஊடாகவே படகு, தோணி மூலம் பயணம் செய்கின்றனர். விவசாய நிலங்களும் முற்றுமுழுதாக பாதிக்கப்பட்டுள்ளன.

இதன்போது பிரம்படித்தீவில் வாழும் மக்களுக்கு சமைத்த உணவும், முருக்கன்தீவில் உள்ள மக்களுக்கு இரவு உணவும் வழங்கியதுடன், பொண்டுகள்சேனை இடைத்தங்கல் முகாமில் தங்கியுள்ள 23 குடும்பங்களுக்கு பாய் மற்றும் 07 குடும்பங்களுக்கு பெற்சீட் உதவிகளையும், படங்கு மற்றும் சிறுவர்களுக்கான ஒரு தொகுதி பொருட்களையும் வழங்கி வைத்தார்.

இவ்வேளை வெள்ளத்தால் பெரிதும் பாதிப்பான நிலையில் முறுத்தானை, மினுமினுத்தவெளி, அக்குறானை, பகுதிகளுக்கு செல்லும் வழிப்பாதைகள் தடைப்பட்டுள்ளதால் இங்குள்ள மக்களின் நிலைமைகளை கேட்றிந்து அவர்களுக்கான உதவிகளை வழங்கி வைக்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார். இங்கு மக்கள் இடைத்தங்கல் முகாம்களுக்கு செல்ல முடியாமல் உறவினர்கள் வீட்டில் இருப்பதுடன், உடமைகளை பாதுகாக்கும் நோக்கில் உயரமான பரன்கள் அமைந்து அதில் தங்கியுள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

கல்குடா தினகரன் நிருபர்

Mon, 12/09/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை