பெற்றி கம்பஸ் விசாரணைகள் உரிய முறையில் நடத்த வேண்டும்

சர்ச்சைக்குரிய மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் தொடர்பிலான விசாரணைகள் உரிய வகையில் நடைபெற வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் தெரிவித்தார்.

பெற்றி கம்பஸ் என்றழைக்கப்படும் மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் தொடர்பிலான விசாரணைகள் எவ்வாறு நடைபெற்று வருகிறதென வினவுவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் அத்துரிலியே ரத்தன தேரர் நேற்று பொலிஸ் நிதி குற்றப்புலனாய்வு பிரிவுக்குச் சென்றிருந்தார்.

பொலிஸ் நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவில் மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் தொடர்பிலான விசாரணைகளை கேட்டறிந்துக்கொண்டப் பின்னர் அங்கு குழுமியிருந்த ஊடகவியலாளர்களிடம் அவர் கருத்து வெளியிட்டார்.

இதன்போது அவர் மேலும் கூறியதாவது,

இக்ரா அறக்கட்டளைக்கென கூறியே கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா காணியொன்றைப் பெற்றுக்கொண்டிருந்தார். இலவசமாக தொழில்நுட்பக் கல்வியைக் கற்பிக்கும் நிறுவனமொன்றை ஸ்தாபிக்கும் நோக்கிலேயே இந்தக் காணி வாங்கப்பட்டது.

என்றாலும், பின்னர், இந்த இடத்தில் மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் கட்டப்பட்டது. இது சட்டவிரோதமான செயற்பாடாகும். இப்பல்கலைக்கழகத்திற்கு நிதி பெற்றுக்கொண்ட முறைமையும் சட்டவிரோதமானதாகும். இதில் பாரிய சிக்கல்கள் உள்ளன. நிதி வழங்கிய நிறுவனங்கள் முதல் அனைத்து செயற்பாடுகளும் சந்தேகத்துக்கு இடமானவையாகும்.

தொழில்நுட்பக் கல்லூரி எனக் கூறி ஷரீஆ சட்டத்தை கற்பிக்கும் நிறுவனமாகவே மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை ஹிஸ்புல்லா உருவாக்கியுள்ளார். முழுதாக அடிப்படைவாதத்தை கற்பிக்கும் கல்வி நிறுவனமாகவே இது அடையாளம் காணப்பட்டுள்ளது.

ஆகவே, இந்தப் பல்கலைக்கழகம் தொடர்பான விசாரணைகள் முறையாகடம்பெற வேண்டும் என்றார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Fri, 12/20/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை