ஐ.தே.கவை பழிவாங்கவே கைதுகள் இடம்பெறுகிறது

சட்ட ரீதியாக நடவடிக்கை

அரசாங்கம் ஐக்கிய தேசிய கட்சியினரை பழிவாங்கும் செயற்பாடுகளை முடுக்கி விட்டிருப்பதாக குற்றச்சாட்டு சுமத்தியிருக்கும் கட்சியின் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் இதற்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பது தொடர்பாக கட்சி

ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்,

ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னரும், புதிய அரசு பதவியேற்ற கையோடும் ஐ.தே.க. தரப்பினர் மீதான அடக்குமுறைகளும், முறைகேடான கைதுகளும் இடம்பெற்று வருகின்றன. இறுதியாக நேற்று முன்தினமிரவு முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக ரணவக்க கைது செய்யப்பட்டுள்ளார்.

அடுத்து மேலும் பலர் மீது இலக்கு வைத்திருப்பதாக அறிய முடிகிறது. இதில் சிரேஷ்ட அமைச்சுப் பதவி வகித்த சிலரும் காணப்படுவதாக தெரிய வருகின்றது. ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை சுமத்தியே இந்த கைதுகள் இடம்பெற்றுவருகின்றன. எமது அரசாங்கத்தில் முக்கிய அமைச்சு பதவியை வகித்தவரான பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக ரணவக்கவை கைது செய்த நடைமுறை பிழையானதாகும்.

நீதிமன்ற ஆணையைப் பெறாமலும், சபாநாயகரின் அனுமதியை பெறாமலுமே இந்தக் கைது இடம்பெற்றுள்ளது. கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டிருக்கின்றார். பொதுத் தேர்தலை இலக்கு வைத்து ஐக்கிய தேசியக் கட்சி மீது களங்கத்தை ஏற்படுத்தி மக்கள் மத்தியில் தவறான பிரசாரங்களை முன்னெடுத்து வங்குரோத்து அரசியலை செய்து வெற்றி பெற முயற்சிக்கின்றனர்.

ஜனநாயக அரசியல் கட்சியொன்றின் மீது அபாண்டங்களை சுமத்தி சுய அரசியல் இலாபம் தேடும் இந்த நடவடிக்கைகளை நாம் கடுமையாக கண்டிக்கின்றோம் என்றார்.

 

எம்.ஏ.எம். நிலாம்

Fri, 12/20/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை