-மக்கள் ஆணையை தற்போதைய பாராளுமன்றம் பிரதிபலிக்கவில்லை

ஜனாதிபதியின் திட்டங்களை நிறைவேற்ற பலம்வாய்ந்த அரசு உருவாக வேண்டும்

தற்போதைய பாராளுமன்றம் உண்மையான மக்கள் ஆணையை வெளிப்படுத்தவில்லை. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் செயற்திட்டங்களை நிறைவேற்றுவதற்கு நிரந்தரமான அரசாங்கமொன்று உருவாக்கப்பட வேண்டும் என கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ஸ தெரிவித்தார்.

கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ஸ நேற்று கண்டிக்கு விஜயம் செய்து மல்வத்தை மகாநாயக்கத் தேரர் வண. திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கள சித்தார்த்த தேரரைச் சந்தித்து நல்லாசி பெற்றார். இதன் ​போதே அவர் மேற்கண்டாவாறு தெரிவித்தார்.

மக்களுக்கு சிறந்த சேவை வழங்குவதற்கு பலமான அரசாங்க மொன்று இருப்பது அவசியமானது. அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வது அவசியம் என மல்வத்து பீடாதிபதி வன. திப்படுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர் இந்த சந்திப்பின் போது கூறியுள்ளார். ஜனாதிபதியின் திட்டங்களை முன்னெடுப்பதற்கு பலமான அரசாங்கமொன்று அவசியம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மிகவும் பொருத்தமான சேவையை மக்களுக்கு மேற்கொள்வதற்கு பலமான அரசு இருக்க வேண்டும். ஆனால் பாராளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலுக்கு செல்லாது காலங்கடத்தப்படுகிறது. புதிய உறுப்பினர்களது ஓய்வூதியக் காலத்தை நிறைவு செய்துகொள்வதற்காகவா இவ்வாறு தாமதிக்கப்படுகிறது என்ற வினா எழுந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர் விமல் வீரவன்ஸ, பெரும்பாலும் மார்ச் அல்லது

 

ஏப்ரல் மாதமளவில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டால் புதிய எம்.பிகளுக்கு ஐந்து வருடங்கள் பூரணமாகாத நிலையும் ஏற்படலாம். ஆனால் அடுத்த வருடம் சக்தி மிக்க பாராளுமன்றம் ஒன்றை அமைக்க முடியும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

தற்போதைய பாராளுமன்றத்தினூடாக உண்மையான மக்கள் ஆணை வௌிப்படுத்தப்படவில்லை.எனவே துரிதமாக தேர்தலை நடத்தி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் செயற்திட்டங்களை முன்னெடுப்பதற்கு நிரந்தரமான அரசாங்கமொன்றை உருவாக்க வேண்டும்.

மார்ச் மாதத்தின் பின்னரே ஜனாதிபதியினால் பாராளுமன்றத்தை கலைக்க முடியும். அதற்கு முன்னர் கலைப்பதானால் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அதிகாரம் தேவை .புதிய எம்பிகளுக்கு ஓய்வூதியம் கிடைக்காமல் போகும் என்பதால் அநேகமான எம்.பிகள் இதற்கு ஆதரவு வழங்குவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஏப்ரல் அல்லது மே மாதத்தில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது எனவும் இதன்போது அவர் சுட்டிக்காட்டினார்.(பா)

 

அக்குறணை குறூப் நிருபர்

Tue, 12/03/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை