சம்பிக்க நிபந்தனையுடன் பிணையில் விடுதலை

சம்பிக்கவின் சாரதிக்கு விளக்கமறியல்

முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க நேற்று பிணையில் விடுதலை செய்யப்பட்டார். கொழும்பு மேலதிக நீதவான் காஞ்சனா நெரஞ்சனி டி சில்வா முன்னிலையில் இவர் நேற்று (24) காலை ஆஜர்படுத்தப்பட்டார்.

இதன்போது, பாட்டலி சம்பிக்க ரணவக்கவை 25,000 ரூபா ரொக்கப்பிணையிலும் தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரரப் பிணைகளிலும் விடுவிப்பதற்கு கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார். அத்துடன், மாத இறுதி

ஞாயிற்றுக்கிழமைகளில் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவிற்கு சமூகமளிக்குமாறும் முன்னாள் அமைச்சருக்கு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். சாட்சியாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கக்கூடாது எனவும்அவருக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. கடந்த 18 ஆம் திகதி இரவு முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, பத்தரமுல்லையிலுள்ள அவரது வீட்டில் வைத்து கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார். மறுநாள் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்ட அவர் 24 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.இந்த நிலையிலே அவர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். 2016 ஆம் ஆண்டு ராஜகிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்து சம்பவம் ஒன்றில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவர் படுகாயமடைந்தார்.இது தொடர்பில் நடந்த வழக்கு விசாரணையில் முன்னாள் அமைச்சரின் பெயரும்அடிபட்ட போதும் அவர் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டிருந்தார்.இந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் இந்த சம்பவம் தொடர்பில் மீள் விசாரணை நடத்துமாறு கோரப்பட்டது. இந்த நிலையிலே பொலிஸார் மீள் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர். இவரை கைது செய்யுமாறு சட்ட மாஅதிபர் சி.ஐ.டிக்கு ஆலோசனை வழங்கியிருந்தார்.

கவனயீனமாக வாகனத்தை செலுத்தி நபரொருவரை படுகாயமடையச் செய்தமை மற்றும் வேறு ஒரு நபரை சாரதியாக அடையாளப்படுத்தியதாக ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரிலே முன்னாள் அமைச்சருக்கு எதிராக விசாரணை முன்னெடுக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்னாள் அமைச்சர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். அவருக்கு பிணைவழங்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை ஆராய்ந்த நீதவான் பிணையை நிராகரிப்பதற்கு காரணம் எதுவும் கிடையாது என்று குறிப்பிட்டார்.விபத்தினால் அரசாங்க ஜீப் வண்டியொன்றுக்கு 9,17 ,244 ரூபா சேதம் ஏற்பட்டதாக சி.ஐ.டி 'பீ' அறிக்கையில் குறிப்பிட்டாலும் இதற்கு சட்ட மாஅதிபரின் ஆலோசனை பெறப்படவில்லை எனவும் நீதவான் இங்கு சுட்டிக்காட்டினார். இதற்கமைய முன்னாள் அமைச்சருக்கு பிணை வழங்குவதாகவும் நீதவான் அறிவித்தார். இதேவேளை முன்னாள் அமைச்சரின் சாரதி என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட நபர் நேற்று சரணடைந்ததோடு அவரை ஜனவரி 6 ஆம் திகதி வரை விளக்கமறியில் வைக்குமாறு நீதிமன்றம் நேற்று உத்திரவிட்டது.

சட்ட மாஅதிபர் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் ஆஜரானதோடு சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு விசாரணைகளை முன்னெடுப்பதாகவும் இதனுடன் பல உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளதாகவும் குறிப்பிட்டார். சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.(பா)

 

Wed, 12/25/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை