பொரிஸ் ஜோன்சனுக்கு அறுதிப் பெரும்பான்மை

பிரிட்டனில் மீண்டும் கன்சர்வேட்டிவ் ஆட்சி

பிரித்தானிய பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் பிரதமர் பொரிஸ் ஜொன்சன் தலைமையிலான கன்சர்வேட்டிவ் (பழைமைவாத) கட்சி அறுதிப் பெரும்பான்மையுடன் வரலாற்று வெற்றியைப் பெற்றுள்ளது.

650 உறுப்பினர்களைக் கொண்ட பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் 326 உறுப்பினர்களைப் பெறும்​கட்சியே வெற்றி பெறும் என்ற நிலையில், பிரதமர் பொரிஸ் ஜொன்சனின் கன்சர்வேட்டிவ் கட்சி 365 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. மற்றைய பிரதான கட்சியான தொழிற்கட்சி 203 உறுப்பினர்களை மட்டுமே கைப்பற்றியுள்ளது.

அந்த வகையில், 1987ஆம் ஆண்டு மார்கரட் தட்சர் மூன்றாவது தடவையாக வெற்றி பெற்றதன் பின்னர், தற்போது கன்சர்வேட்டிவ் கட்சி அமோகமாக வெற்றி பெற்றுள்ளது. ஜெறமி காபைனின் தொழிற்கட்சி ஐம்பது ஆண்டுகளில் மிக மோசமான பின்னடைவைச் சந்தித்துள்ளது. இந்நிலையில், அடுத்த தேர்தலில் போட்டியிடும் வகையில் தாம் கட்சித் தலைமைப் பதவியில் நீடிக்கப்போவதில்லை என்று ஜெறமி காபைன் அறிவித்துள்ளார்.

இதேவேளை, பிரதமர் பொரிஸ் ஜொன்சன், மகாராணியைச் சந்தித்து ஆட்சியமைக்க அனுமதி கோரியுள்ளதாக பிரித்தானிய செய்திகள் தெரிவித்தன. பிரிட்டன் பொதுத்தேர்தல் வாக்கெடுப்பு 12ஆம் திகதி ஜி.எம்.ரி நேரம் காலை 7மணி முதல் இரவு 10 மணிவரை நடைபெற்றது.

650 தொகுதிகளுக்கான தேர்தல் வாக்களிப்பிற்கென இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து, வடஅயர்லாந்து, வேல்ஸ் ஆகியவற்றில் காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு ஆரம்பமானது. பிரிட்டனில் ஐந்து அல்லது நான்கு ஆண்டுகளுக்கு ஒரு தடவை பொதுத்தேர்தல் நடைபெற்றாலும், கடந்த ஒக்டோபர் மாதம் இரண்டாவது திடீர்ப் பொதுத்தேர்தல் நடைபெற்றது.

கடந்த 1974ஆம் ஆண்டுக்குப் பின்னர் இப்போதே குளிர்காலத்தில் தேர்தல் நடைபெற்றிருக்கிறது. அதுவும் சுமார் 100 ஆண்டுகளுக்குப் பிறகு (1923) டிசம்பர் மாதத்தில் தேர்தல் நடைபெற்றுள்ளது. கன்சர்வேட்டிவ் கட்சியும் தொழிற்கட்சியும் பிரதான போட்டிக்களத்தில் இருந்தன. தேர்தலில் மொத்தம் 3321 பேர் போட்டியிட்டார்கள். இதில், 1,124 பேர் பெண்களாவர்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இங்கிலாந்து விலகுவதில் தொடர்ந்து குழப்பம் நீடித்ததைத் தொடர்ந்து உடனடியாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. பிரதமர் பொரிஸ் ஜொன்சன் எதிர்பார்த்த வெற்றியைப் பெற்றிருப்பதால், எதிர்வரும் ஜனவரி 31ஆம் திகதிக்குள் பிறெக்ஸிட் விவகாரத்தை முடிவுக்குக் கொண்டுவருவதுடன் மக்கள் தம்மீது வைத்துள்ள நம்பிக்கையைக் காப்பாற்றுவதாகவும் உறுதியளித்திருக்கிறார். (வி)

நமது நிருபர்

Sat, 12/14/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை