உலக அழகியாக ஜமைக்காவின் டோனி ஆன்சிங் பட்டம் வென்றார்

இந்தாண்டுக்கான உலக அழகிப் பட்டத்தை ஜமைக்காவைச் சேர்ந்த இளம்பெண் டோனி ஆன்சிங் வென்றுள்ளார். இந்தியாவைச் சேர்ந்த சுமன் ராவ் மூன்றாவது இடத்தைக் கைப்பற்றியுள்ளார்.

69ஆவது உலக அழகிப் போட்டி கிழக்கு லண்டனில் உள்ள எக்செல் மையத்தில் கடந்த மாதம் 20ஆம் திகதி ஆரம்பமானது. மொத்தம் 111 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் பங்கேற்றதில், பல்வேறு போட்டிகளுக்குப் பின் 40 பேர் வரிசைப்படுத்தப்பட்டனர்.

உலக அழகி யார் என்பதை தேர்வு செய்வதற்கான போட்டி கடந்த சனிக்கிழமை இரவு நடைபெற்றது. இதில் ஜமைக்கா, பிரான்ஸ், இந்தியா, பிரேசில், நைஜீரியா அழகிகள் இறுதிச் சுற்றுக்கு தகுதிபெற்றனர்.

இறுதிச் சுற்றில் ஜமைக்கா இளம்பெண் டோனி ஆன்சிங் உலக அழகியாக தேர்வுசெய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டார். அவருக்கு கடந்த ஆண்டு உலக அழகிப் பட்டம் வென்ற மெக்சிகோ அழகியான வனிசா பொன்சி டி லியான் மகுடம் அணிவித்தார்.

மொரான்ட் பேயில் பிறந்து வளர்ந்த டோனி, தற்போது அமெரிக்காவின் பிளோரிடா பல்கலைக் கழகத்தில் படித்து வருகிறார்.

பிரான்சின் ஓபெலி மெசினா இரண்டாம் இடத்தையும், இந்திய அழகி சுமன்ராவ் மூன்றாம் இடத்தையும் கைப்பற்றினர். இந்தியாவைச் சேர்ந்த ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சொப்ரா, டயானா ஹைடன், யுக்தா முகி, மனுஷி சில்லார் உள்ளிட்டோர் உலக அழகிகளாக வெற்றிபெற்றாலும், முதன்முறையாக சுமன்ராவ்தான் 3ஆவது இடத்திற்கு தேர்வாகி உள்ளார்.

Mon, 12/16/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை