அம்பாறை மாவட்டத்தில் இரு தினங்களாக அடை மழை

தாழ் நிலங்கள் வெள்ளத்தில்; சேனநாயக்க சமுத்திரம் 86.6அடியையும் தாண்டியது 

அம்பாறை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக பெய்து வந்த தொடர் மழை ஓய்ந்திருந்த நிலையில் மீண்டும் கடந்த இரு தினங்களாக கடும்மழை பெய்து வருகிறது. மாவட்டத்தின் கணிசமான பகுதிகளில் நேற்று காலை முதல் நண்பகல் வரை தொடர்ச்சியான மழை பெய்து கொண்டிருந்தது. இதனால் மாவட்டத்தின் தாழ் நிலப் பகுதிகள், வயல் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. நம் நாட்டின் மிகப் பெரிய நீர்த்தேக்கமாகக் கருதப்படும் இங்கினியாகல, சேனநாயக்க சமுத்திரத்தின் நீர்மட்டம்  86.6அடியைத் தாண்டியுள்ளதாகவும் அது 110அடிகளை தாண்டிய பின்னரே வான் கதவுகள் திறக்கப்படும் எனவும் மாவட்ட பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் சுகத கமகே தெரிவித்தார்.

மேலும் இத் தொடர்ச்சியான மழையினால் மல்வத்த, நிந்தவூர், காரைதீவு, அட்டாளைச்சேனை, இறக்காமம், அக்கரைப்பற்று, திருக்கோவில், உஹன, தமன பிரதேசங்களின் தாழ்வயல் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும் விவசாயத் திணைக்களத்தின் உயர் அதிகாரி தெரிவித்தார். 

இந்த மழையின் தாக்கத்தினால் அம்பாறை நகரிலுள்ள மாவட்ட அரச அலுவலகங்களின் ஊழியர்களின் வரவும் நேற்று மிகவும் குறைவாகவும் காணப்பட்டதுடன் நேற்று நண்பகல் (புதன்கிழமை) வரை வானம் இருள் சூழ்ந்து மப்பும் மந்தாரமுமாகக் காணப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

அத்துடன் மகாஓயா, ரம்புக்கன்ஓயா நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் மகாஓயா பகுதியின் தாழ்நிலங்கள் நீரில் மூழ்கி காணப்படுவதாகவும் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அதிகாரி தெரிவித்தார்.

அம்பாறை மத்திய குறூப் நிருபர்  அம்பாறை மாவட்டத்தில் இரு தினங்களாக அடை மழை

Thu, 12/19/2019 - 08:40


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை