தேசிய கீத விடயத்தை வைத்து இனங்களிடையே பிரிவினை ஏற்படுத்த வடக்கு அரசியல்வாதிகள் முயற்சி

தேசிய கீதப் பிரச்சினையை தேவையற்ற விதத்தில் தூக்கிப் பிடித்துக்கொண்டு தமிழ், சிங்கள மக்கள் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்த வடக்கின் அரசியல்வாதிகள் முற்படுவதாக இராஜாங்க அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இனங்களுக்கிடையில் வன்முறைகளையும், முரண்பாடுகளையும் ஏற்படுத்த எவருக்கும் இடமளிக்கக் கூடாதெனவும் அவர் கூறியுள்ளார். கண்டியில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

தேவையற்ற விதத்தில் தேசிய கீதம் தொடர்பிலான பிரச்சினையை சிலர் கட்டவிழ்த்துவிட்டு வருகின்றனர். வடக்கின் அரசியல்வாதிகளின் தலையில் வாழ்வது இன்னமும் பிரபாகரனின் சிந்தனையும், எண்ணங்களும்தான்.

30 வருடங்களாக பிரபாகரனின் கீழே வடக்கு மக்கள் வாழ்ந்தனர். வடபகுதி சிறுவர்கள் பிரபாகரனின் பார்வையில் கோஷங்களை எழுப்பும்போது அனைவரும் அதற்கு கைதட்டுகின்றனர்.

இளைஞர்களின் பிரபல்யத்தை பெற்றுக்கொள்வதற்காக விக்னேஸ்வரன் போன்றோர் அடிப்படைவாதத்தை பேசுகின்றனர். அனைத்து அரசியல்வாதிகளும் இணைந்து இந்த இளைஞர்களின் மனதை சரிசெய்ய வேண்டும். ஒருநாட்டில் ஒரு இனமாக அப்போதுதான் வாழ முடியும்.

738 மொழிகள் பேசும் இந்தியர்களுக்கு ஒன்றாக இருக்க முடியும் என்றால், வங்காள மொழியில் தேசிய கீதத்தையும் இசைக்கவும் முடியுமென்றால் எதற்காக இந்த பிரச்சினையை தூக்கிப் பிடித்துக்கொண்டுள்ளனர். தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்தி தமிழ், சிங்கள மக்களை பிளவுப்படுத்த வேண்டாம் என்றும் கூறினார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Mon, 12/30/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை