உலகில் இலங்கை எதிரிகளை கொண்டிருக்கப் போவதில்லை

இலங்கை தீவிரம் மிக்க நடுநிலை வெளிநாட்டுக் கொள்கையைப் பின்பற்றும் என்றும் உலக சமூகங்களுக்கிடையில் இலங்கையானது நண்பர்களை கொண்டிருக்குமே தவிர எதிரிகளைக் கொண்டிருக்காது என்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன எமக்கு வழங்கிய பிரத்தியேக பேட்டியில் குறிப்பிட்டார். ஐக்கிய நாடுகளின் மனித உரிமை கவுன்ஸிலுக்கான நிகழ்ச்சி நிரல் தொடர்பான மனித உரிமைகள் பற்றிய நடைமுறையை தனது அமைச்சு ஏற்கனவே ஆரம்பித்து விட்டதாகவும் அமைச்சர் அப்பேட்டியில் மேலும் கூறினார்

கேள்வி: புதிய அரசாங்கத்தின் வெளிநாட்டுக் கொள்கையின் முக்கிய அம்சங்கள் என்னென்ன?

பதில்: வெளிநாடுகளுக்கான உறவுகள் தொடர்பாக இலங்கை முற்றிலும் புதிய செயற்பாடுகளை வகுத்து அவற்றை முறையாகப் பின்பற்ற வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்திருக்கிறார். அது முற்றிலும் அணிசேராததாகவும், நடுநிலை வெளிநாட்டுக் கொள்கைகளைப் பின்பற்றுவதாகவும் இருக்க வேண்டும். எமது அரசாங்கத்தின் வெளிநாட்டு உறவுகளில் இது மிகவும் முக்கிய அடிப்படையாகும். அணிசேரா இயக்கத்தின் ஸ்தாபக உறுப்பு நாடான இலங்கை இத்தகைய அணிசேராக் கொள்கை காரணமாகவே எப்போதும் மதிப்புடன் ஏற்றுக் கொள்ளப்படும் நாடாக உள்ளது. கடந்த சில வருடங்களாக இந்தக் கொள்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதைக் காண முடிகிறது. எனினும் எம்மை மீண்டும் பழைய நிலைக்கு எடுத்துச் செல்லும் வகையில் ஏனைய நாடுகளதும் சர்வதேச அமைப்புகளினதும் நம்பிக்கையை கட்டியெழுப்பும் வகையில் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எமது பொருளாதார அபிவிருத்தியை ஊக்குவிக்க மேற்படி செயற்பாடுகள் அடித்தளம் அமைக்கும்.

கேள்வி: இந்து சமுத்திரப் பிரதேசத்தில் பூகோள முக்கியத்துவம் பெற்ற இடத்தில் மேற்கிற்கும் கிழக்குக்கும் இடைநடுவில் இலங்கை அமைந்திருப்பதால் நடுநிலை வகிக்கவும் மற்றும் வல்லரசு நாடுகளுக்கடையே சிக்கிக் கொள்ளாமலும் இருப்பது சாத்தியப்படுமா?

பதில்: இலங்கை தனது சிறப்பான தலைமைத்துவத்தின் மூலம் இதனை செயற்படுத்திக் காட்டியுள்ளது. அது அனைவராலும் மதிக்கப்பட்ட நிலையில் அதனை மீண்டும் சாதிக்க முடியும். இலங்கையானது இதனை புதிதாக செயற்படுத்தவில்லை. எமது நடுநிலைக் கொள்கை மூலம் கடற்பாதைகளை சீராக பயன்படுத்தவும் அவற்றை பாதுகாப்பாக வைத்திருக்கவும் முடியும். எமது பூகோள நிலை இந்து சமுத்திரத்தில் முக்கிய இடத்தைப் பெறுகிறது. எமது அண்டை நாடுகளும் சர்வதேச சமூகமும் விழுமியங்களுக்கு மதிப்பளிப்பதுடன் இரு தரப்பு மற்றும் பலதரப்பட்ட விடயங்களில் பரஸ்பர புரிந்துணர்வுடன் செயற்படும் என்று நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம்.

கேள்வி: அண்மைக் காலத்தில் நாம் மேற்குலகை நோக்கித்தான் நகர்கிறோம். எனவே எமது வெளிநாட்டுக் கொள்கையில் நாம் இப்போது பிரதான மாற்று நகர்வினைக் காண்கிறோமா?

பதில்: நாம் இப்போது அனைவரினாலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய வெளிநாட்டுக் கொள்கைக்குத் திரும்பியிருக்கிறோம். சில நேரங்களில் எமது அனைத்து அரசாங்கங்களும் அதனை அவ்வாறு பின்பற்றுவதில்லை. இது பெரும் பிரச்சினையாகும். நாம் மீண்டும் எமது அணிசேரா வெளிநாட்டு கொள்கைக்கு திரும்ப வேண்டும். நாம் மேற்கு நோக்கி எமது நட்பு நாடுகளுடன் இணைந்து செயற்படவுள்ளோம். அது எமக்கு நட்பு நாடுகளையே உருவாக்குமே தவிர பகையாளிகளை உருவாக்காது.

கேள்வி: இலங்கையானது சீனாவின் ‘ஒரே பட்டி மற்றும் ஒரே பாதை’ நடைமுறையில் முக்கிய இடத்தைப் பெற்றிருந்ததே?

பதில்: சீனாவின் மேற்படி நடைமுறை ஆசியாவுக்கும் மற்றைய நாடுகளுக்கும் ஒரு வரப்பிரசாதமாக அமைந்திருந்தது. அதிகாரம் இடம்பெறும் ஒரு நூற்றாண்டில் நாம் இப்போது இருக்கிறோம். அத்துடன் ஆசியா முக்கிய பங்காற்றும் ஒரு யுகம் இது. எனவே ஆசியப் பிராந்தியத்தில் உள்ள நாடுகள் வழங்கக் கூடிய பங்களிப்பு மிகவும் முக்கியமானது. எமது அண்டை நாடான இந்தியாவுடன் பொருளாதார மற்றும் ஏனைய உறவுகளை நாம் மேம்படுத்திக் கொள்ள வேண்டும். அத்துடன் பாகிஸ்தான் போன்ற நாடுகளின் நட்பும் எமக்குத் தேவைப்படுகிறது.

கேள்வி: சார்க் தொடர்பான மாற்றங்கள் என்ன?

பதில்: இப்போதைக்கு இலங்கை பல நாடுகளுக்கு இலவச விசா வழங்கும் செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தி வருகின்றது. எனினும் இலங்கையில் இருந்து செல்லும் பௌத்த யாத்திரிகர்களுக்கு சிறிய நாடுகளுக்குச் செல்லக் கூட இவ்வாறான வசதிகள் இல்லை. இவ்வாறான விடயங்கள் பற்றி ஜனாதிபதியும், பிரதமரும் மற்றைய சார்க் நாடுகளுடன் பேசுவார்கள். பரஸ்பர நோக்கங்கள் பற்றி நாம் பரிசீலிப்போம். அத்துடன் இவ்விடயம் தொடர்பாக நாம் படிப்படியாக முன்னேறுவோம்.

கேள்வி: சுவிஸ் தூதரகத்தின் உள்ளூர்ப் பணியாளர் ஒருவர் துப்பாக்கி முனையில் கடத்திச் செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டுள்ளார். இந்த விடயத்தை அரசாங்கம் பாரதூரமான விடயமாகக் கருதுகின்றதா?

பதில்: நான் கடந்த வாரம் சுவிஸ் தூதுவரை நேரில் சந்தித்து இது பற்றிப் பேசினேன். இவ்விடயம் தொடர்பாக அரசாங்கம் தனது முழு ஒத்துழைப்பையும் வழங்கும் என்று நான் அவருக்கு உறுதியளித்தேன். இது பற்றிய விசாரணைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த விசாரணைகள் தொடரும்.

கேள்வி: இவ்வாறான சம்பவங்கள் புதிய அரசாங்கத்துக்கு இழுக்கு ஏற்படுத்துமல்லவா?

பதில்: அது உண்மைதான். ஆனால் இந்த விடயத்தின் அடிப்படையை நாம் அறிய வேண்டும். குற்றச்சாட்டுக்கள் மேற்கொள்ளப்படுகின்றன. கடந்த சில வருடங்களாக இதனை நாம் பார்த்து வருகிறோம். முன்னைய அரசாங்கத்தின் தலைவர்களால் பல குற்றசாட்டுக்கள் சுமத்தப்பட்டன. எனினும் அவை நிரூபிக்கப்படவில்லை. அரசாங்கத்தின் கௌரவத்துக்கு இழுக்கை ஏற்படுத்தும் முயற்சிகள் பற்றி நாம் அறிந்திருக்கிறோம். எனவே இவ்விடயத்தில் நாம் உண்மையைக் கண்டறிய வேண்டும். நாம் திறந்த மனதுடன் செயற்படுகிறோம். சுவிஸ் தூதரகத்துக்கு நாம் ஆதரவு வழங்கும் அதேநேரம், சம்பவம் தொடர்பான விசாரணைகள் இடம்பெறுவதை நான் உறுதி செய்கின்றேன்.

கேள்வி: இந்த விடயத்தின் பின்னணியில் அரச புலனாய்வுத்துறை செயற்பட்டதாக குற்றம் சுமத்தப்படுகிறது.

பதில்: இதில் அரசாங்கம் சம்பந்தப்பட்டிருந்தால் அவ்வளவு துரிதமாக செயற்பட்டிருக்காது. அத்துடன் சம்பவத்தின் பின்னணியில் செயற்பட்டது யார் என்பதைத் தெரிந்து கொள்வது பற்றிய பொறுப்பை அரசாங்கம் ஏற்றுக் கொண்டு பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படலாம். ஜனநாயக சமூகத்தில் இவ்வாறு இடம்பெறலாம். இந்த சுதந்திரத்தை நாம் கட்டுப்படுத்த மாட்டோம்.

கேள்வி: ஐக்கிய நாடுகளின் மனித உரிமை கவுன்ஸிலின் 30/1 மற்றும் 34/1 என்ற இலங்கைக்கு எதிரான சீர்திருத்தங்களை இப்போது எடுத்துக் கொள்ளப் போகிறீர்கள். இந்த நடைமுறை மீண்டும் எடுக்கப்பட வேண்டும் என்று ஏன் நினைக்கின்றீர்கள்?

பதில்: எமது இறைமைக்கும் சுதந்திரத்திற்கும் மாசு ஏற்படுத்தும் எந்தவொரு உடன்படிக்கையும் மீளாய்வு செய்யப்பட வேண்டும் என்று எமது ஜனாதிபதி தெளிவாகக் கூறியுள்ள நிலையில், இந்த விவகாரம் மீண்டும் எடுக்கப்பட வேண்டியதாகிறது. அதேநேரம் ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய நியமங்களுக்கு அப்பால் கைச்சாத்திட்டு நடைமுறைப்படுத்தப்படும் எந்தவொரு ஒப்பந்தத்தையும் மீளாய்வு செய்ய நாம் தயங்கப் போவதில்லை. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் எம். சி. சி. ஒப்பந்தத்துக்கு கண்டனம் தெரிவித்திருந்தார். இந்த ஒப்பந்தம் தொடர்பாக முழு நாடும் கண்டனம் தெரிவித்தது. ஜெனீவா தீர்மானம் மட்டுமல்ல, அவ்வாறான அனைத்து சர்வதேச ஒப்பந்தங்களும் மீளாய்வு செய்யப்படும். பாராளுமன்றத்துக்கு அறிவிக்காமல் கைச்சாத்திடப்பட்ட அனைத்து ஒப்பந்தங்களும் இவ்வாறு மீளாய்வு செய்யப்படுவதில் இருந்து தப்ப முடியாது.

கேள்வி: அடுத்த ஐக்கிய நாட்டு மனித உரிமை கூட்டத் தொடர் அடுத்த வருடம் மார்ச் மாதத்தில் வருகிறது. இந்த நடைமுறை முன்னெடுத்துச் செல்லும் திட்டத்தை எவ்வாறு வகுத்துள்ளீர்கள்?

பதில்: இந்த நடைமுறையை நாம் ஏற்கனவே ஆரம்பித்து விட்டோம். மற்றைய ஆதரவு முகவர்கள் மற்றும் விற்பன்னர்களுடன் வெளிநாட்டு அமைச்சு இதற்கான வேலைகளில் இறங்கியுள்ளது. எமது நிலையை தெளிவுபடுத்தி இதுபற்றி நாம் சர்வதேசத்தில் உள்ள எமது நண்பர்களுடன் பேசுவோம். இறுதியான சீர்திருத்தம் நிறைவேற்றப்பட்ட போது அந்தச் சீர்திருத்தம் தொடர்பான அடிப்படை மற்றும் அது பிழையானது என்பது தொடர்பாக இடம்பெற்ற ஆட்சேபனைகள் பற்றிய இணைப்பொன்று அதனுடன் சேர்க்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஒரு புதிய அரசாங்கம் என்ற வகையில் எமது ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சரவை அரசியலமைப்பு பிரகாரமே செயற்படும். முன்னைய இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகள் தவறான திசையில் சென்றமை இப்போது வெளிப்பட்டுள்ளது.

இவ்வாறு வெளியான தகவல்கள் பற்றி அங்கத்துவ நாடுகளுக்கு இதுவரை தெரியாமல் கூட இருக்கலாம். நாம் இது தொடர்பாக சாதக நிலையுடன் செயற்படுவோம். தேர்தலில் எமக்குக் கிடைத்த மக்கள் ஆணை இதனை தெளிவாக விளக்குகிறது. இந்த ஒப்பந்தம் மீளாய்வு செய்யப்பட வேண்டும் என்பதை அது கூறுகிறது. அத்துடன் இலங்கையில் உள்ள சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் கௌரவம் பேணப்பட வேண்டும்.

கேள்வி: இந்த விடயத்தில் பிரதேசத்தில் உள்ள நாடுகள் இலங்கைக்கு ஆதரவு வழங்கும் என்று நினைக்கிறீர்களா?

பதில்: ஜெனீவாவிலும் ஏனைய இடங்களிலும் உள்ள மற்றைய மேடைகளிலும் எழுப்பப்பட்ட விடயங்கள் தொடர்பாக நாட்டில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் பற்றி நாம் சர்வதேச சமூகத்துக்கு விளங்கிக் கூறுவோம். ஐக்கிய நாடுகளின் பயங்கரவாதம் மற்றும் போதைவஸ்து தொடர்பான உப முகவர் பிரதிநிதிகளை நான் இந்த வாரம் சந்தித்துப் பேசினேன். எமது அண்டை நாடுகளையும் சர்வதேச அமைப்புகளையும் நாம் நம்புகிறோம். இலங்கையின் நிலையையும், விடயம் தொடர்பான நிலைப்பாட்டையும் சர்வதேச அமைப்புகள் புரிந்து கொள்ளும் என்று நம்புகிறோம்.

கேள்வி: ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பலத்த சர்ச்சையை ஏற்படுத்திய மிலேனியம் சவால் கூட்டுறவு ஒப்பந்தம் (எம்சிசி) விரைவில் இலங்கையில் ஆரம்பிக்கப்படும் என்று அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறியிருக்கிறாரே? அது பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?

பதில்: சர்ச்சைக்குரிய மற்றும் ஜனநாயக ரீதியில் அல்லாத சர்வதேச மற்றும் இரு தரப்பு ஒப்பந்தங்கள் பற்றி கடந்த அரசாங்கத்தில் இருந்த சில அமைச்சர்கள் தவிர்ந்த ஏனைய பலர் கேள்வியெழுப்பியுள்ளனர். இந்த ஒப்பந்தங்களை கொண்டு வந்துள்ள நாடுகள் அவர்களது நிலைப்பாட்டிலேயே தொடர வேண்டும். ஆனால் எமது நிலைப்பாட்டையும் அவர்கள் உணர வேண்டும். எமக்கு பல்வேறு கடன் மற்றும் திட்டங்களினால் சுமைகள் ஏற்பட்டுள்ளன. இது சாதக பாதகங்களை ஏற்படுத்தலாம். ஒட்டுமொத்த நிலைப்பாட்டை மீளாய்வு செய்வதற்கான ஆணை மக்களிடம் இருந்து எமக்குக் கிடைத்துள்ளது. அவ்வாறு மீளாய்வு செய்ய வேண்டிய ஒப்பந்தங்களில் இதுவும் ஒன்றாகும். இது நிதி அமைச்சின் கீழ் வரும் போதிலும் வெளிநாட்டு அமைச்சும் இது பற்றி அக்கறை செலுத்தும்.

கேள்வி: எந்த அடிப்படையில் இந்த ஒப்பந்தம் விரைவில் இலங்கையில் ஆரம்பிக்கப்படும் என்று அமெரிக்க அதிகாரி கூறுகிறார்? ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னரே முன்னைய அரசாங்கம் இது பற்றிய ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டுள்ளதா?

பதில்: இந்த ஒப்பந்தம் பற்றி பல விடயங்கள் பேசப்பட்டுள்ளன. முன்னயை அரசாங்கம் இதனை விரைவில் நடைமுறைப்படுத்த முயன்றது. தேர்தலில் இது பற்றி அவர்களுக்கு பிரச்சினைப்படுத்த வேண்டியிருந்தது. அனால் மக்கள் தமது ஆணையை எமக்கு வழங்கும் முன்னைய அரசின் இந்த ஒப்பந்தம் தொடர்பான முன்னேற்பாடுகளை நிராகரித்து விட்டனர். இந்த ஒப்பந்தத்தின் விதிமுறைகளுக்கு ஏற்ப அதை நடைமுறைப்படுத்த வேண்டுமானால் பாராளுமன்றத்துக்கு ஊடாகவே வர வேண்டும். ஆனால் இந்த ஆவணத்தை பாராளுமன்றம் இன்னும் காணவே இல்லை.

கேள்வி: இந்த ஒப்பந்தம் எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு முன்னர் பாராளுமன்றத்துக்கு வருமா?

பதில்: நாம் இணக்கம் தெரிவிக்காமல் அந்த ஒப்பந்தம் பாராளுமன்றத்துக்கு வர முடியாது.

கேள்வி: பிரிட்டனில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஒரு சில தொகுதிகளில் இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலை பற்றி பேசப்படுகிறது. வெளிநாட்டலுவல்கள் அமைச்சு இது தொடர்பாக கவனம் செலுத்தியுள்ளதா?

பதில்: பிரிட்டனில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகர் இந்த விடயத்தையிட்டு கடந்த 27ம் திகதி கவனத்தை ஈர்த்திருக்கிறார். பிரிட்டனில் கணிசமான அளவு இலங்கையின் புலம்பெயர் சமூகம் வசிக்கிறது. இவர்கள் தேர்தல் பெறுபேறுகளை மாற்றக் கூடிய அளவில் உள்ளனர். அதிகாரத்தைக் கைப்பற்ற நினைக்கும் கட்சிகள் மேற்படி புலம்பெயர் சமூகத்தினரைத் திருப்திப்படுத்தும் வகையில் நடவடிக்கையில் இறங்குவதுண்டு. முன்னரும் இதுபோல் நடந்துள்ளது. அதனால்தான் மேற்படி கதைகளைப் பரப்பி அதன் மூலம் இலாபம் பெற முனைகின்றனர். இதுபற்றி நாம் பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியுள்ளோம். பிரிட்டிஷ் பிதமர் ஒருவர் முன்னர் ஒருமுறை இதுபோன்ற கருத்துக்களை சர்வஜன வாக்கெடுப்பு ஒன்று நடத்திய சமயத்தில் வெளிப்படுத்தியிருந்தார். எனினும் அதன்மூலம் அவர்களுக்கு நினைத்த அளவு சாதகமான பலன் கிடைக்கவில்லை. குறிப்பிட்ட சில தொகுதிகளில் அவர் எதிர்பார்ப்புக்கு மாறாக நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. பிரிட்டனில் அடுத்த வாரம் தேர்தல் வரப் போகிறது. அரசியல்வாதிகள் இப்போது பிரசாரத்தில் மும்முரமாக உள்ளனர். இலங்கையைப் பற்றி தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ள ஒரு பிரதான அரசியல் கட்சி இலங்கையில் உள்ள உண்மை நிலையைப் பற்றி தெரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.

கேள்வி: ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்காக வெளிநாட்டில் உள்ள இலங்கை வாக்காளர்கள் பலர் இலங்கைக்கு வந்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளருக்கு வாக்களித்ததாகத் தெரியவருகிறது. நாட்டின் அபிவிருத்தியில் பங்குபற்ற அவர்களுக்கும் வாய்ப்பளிக்கப்படுமா?

பதில்: இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு குடிபெயர்ந்தவர்களும், புலம்பெயர்ந்தவர்களும் அவர்கள் சிங்களவர்கள், தமிழர்கள் அல்லது முஸ்லிம்கள் என்ற வேறுபாடு இன்றி அனைத்து இலங்கையர்களும் நாட்டின் அபிவிருத்தியில் பங்குபற்றலாம். வடக்கிலும் கிழக்கிலும் நல்லெண்ண நடைமுறையை விரைவுபடுத்துவதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார். வடக்கில் கண்ணிவெடி அகழ்வு நடவடிக்கைகள் இன்னும் முழுமை பெறவில்லை என்பதை நாம் மறக்கக் கூடாது. மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் கண்ணிவெடி அகழ்வு, நடவடிக்கைகள் துரிதகதியில் இடம்பெற்றன. எனினும் கடந்த சில வருடங்களாக மந்த கதியிலேயே கண்ணிவெடி அகழ்வு நடவடிக்கைகள் இடம்பெற்றன. அடுத்த வருடமளவில் கண்ணிவெடி அகழ்வு நடவடிக்கைகளை முடிப்பதற்கு நாம் எதிர்பார்த்துள்ளோம். இதேநேரம் இடம்பெயர்ந்தவர்களுக்கான மீள்குடியேற்றம் மற்றும் வீடமைப்பு நடவடிக்கைகள் கடந்த நான்கரை வருடங்களில் முழுமை பெறாமல் உள்ளன. இந்த வேலைகளை நாம் விரைவுபடுத்துவோம். எனவே வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு மீண்டும் தமது தாய்நாட்டுக்கு வந்து அதன் அபிவிருத்தியில் பங்குபற்றுமாறு பகிரங்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இலங்கையின் அபிவிருத்தி செயற்பாடுகளில் புலம்பெயர்ந்த தமிழர்கள் பங்குபற்றுவதற்கு இருந்து வந்த முட்டுக்கட்டைகள் ஜனாதிபதியினால் ஏற்கனவே தளர்த்தப்பட்டுள்ளன. எனவே புலம்பெயர்ந்தோர் இலங்கைக்கு தைரியமாக வரலாம். வந்து வடக்கு கிழக்கின் அபிவிருத்தி வேலைகளில் பங்கேற்கலாம்.

மஞ்சுள பெர்னாண்டோ

Sat, 12/07/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை