தமிழ் மொழியில் தேசிய கீதம்; ஜனாதிபதிக்கு மனோ கடிதம்

சுதந்திர தின நிகழ்வில் தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்படமாட்டாதென துறைசார் அமைச்சர் அறிவித்துள்ளதாக வெளிவந்துள்ள செய்தி உண்மையாயின் இந்த முடிவை இரத்துச் செய்ய அறிவுறுத்தல் வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் மனோ கணேசன் எம்.பி. அவசர கடிதம் ஒன்றின் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

எதிர்வரும் பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ள சுதந்திர தின நிகழ்வில் தமிழ் மொழியில் தேசிய கீதம்  பாடப்படமாட்டாதென அமைச்சர் ஜனக்க பண்டார தென்னக்கோன் அறிவித்துள்ளதாக வெளியாகியுள்ள செய்தி, தமிழ் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இத்தகைய முடிவு, இலங்கையின் அரசியலமைப்பில் இணை ஆட்சி மொழியாகவும், இணை தேசிய மொழியாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள தமிழ் மொழியை புறந்தள்ளி இலங்கையை மொழி, இனரீதியாக பிரிக்கும் ஒரு பிரிவினைவாத செயல் என்பதை உங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன்.  

பதவியேற்பு நிகழ்வின் ‘அனைத்து இலங்கையர்களுக்குமான ஜனாதிபதியாக செயற்படுவேன்’ என்று நாட்டுக்கு தந்த உங்கள் உறுதிமொழியின் அடிப்படையில் தமிழ் மொழியிலான தேசிய கீதத்தை அகற்றும் இந்த முடிவை இரத்துச் செய்ய துறைசார் அமைச்சருக்கு அறிவுறுத்தல் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பியுள்ள அவசர கடிதத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர், மனோ கணேசன் எம்.பி கூறியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பில் தமது டுவீடர், முகநூல் தளங்களிலும் பதிவுகளை மேற்கொண்டுள்ள மனோ எம்பி, ஜனாதிபதி கோட்டாபயவுக்கு அனுப்பியுள்ள தமது கடிதத்தில் மேலும் கூறியுள்ளாதாவது, மூன்று மொழிகளையும் பேசி, எழுதி, தேசிய மொழிகள் மூலம் தேசிய ஒருமைபாட்டை ஏற்படுத்துவதில் நம்பிக்கை கொண்ட கட்சித் தலைவர் என்ற முறையிலும், 67 வருடங்களுக்கு பிறகு சுதந்திர தின நிகழ்வில் தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்பட்டதை உறுதி செய்ய பாடுபட்ட ஒருவன் என்ற முறையிலும், தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள் விவகாரங்களை கையாண்ட முன்னாள் அமைச்சர் என்ற முறையிலும் நான் இதை உங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். இந்தியாவின் பெருமகன் ரவீந்திரநாத் தாகூர் அவர்களின் சீடனாக, கொல்கத்தா சாந்தி நிகேதனில் பயின்ற, நமது நாட்டு தேசிய கவிஞர் அமரகோன் அவ்வேளையில் எழுதி, இசையமைத்த, அன்றைய தேசிய பாடல்தான், பின்னாளில் நமது தேசிய கீதமாக அங்கீகாரம் பெற்றது என்பதை ஞாபகப்படுத்துகிறேன். இந்த தேசிய கீதத்தை இலங்கையின் தமிழ் அறிஞர் நமசிவாயம் என்பவர், வரிக்குவரி அப்படியே தமிழ் மொழியில் மொழி பெயர்த்துள்ளார். ஒரே அர்த்தத்தில், ஒரே இசை வடிவில், நமது தாய் நாட்டை, “நமோ நமோ மாதா” என சிங்களத்திலும், “நமோ நமோ தாயே” என தமிழிலும் பாடும் தேசிய கீதம் எமக்கு கிடைத்துள்ளது எமது அதிஷ்டமாகும். இதை பிரதானமாக கொண்டு மொழி உரிமைகளை பயன்படுத்தி நாம் இந்நாட்டில் வாழும் இரண்டு மொழிகளை பேசும் இனத்தவர்களையும் இலங்கையர்களாக ஒன்று சேர்ப்போம் என் நான் உங்களுக்கு கோரிக்கை விடுக்க விரும்புகிறேன் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Fri, 12/27/2019 - 09:37


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை