​பொதுத் தேர்தலை அடுத்தே தீர்க்கமான முடிவு

புதிய அரசாங்கத்தின் ஊடாகவே மலையகத்தில் பாரிய அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க முடியும். ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் பொதுத் தேர்தலில் மாற்றமடையக் கூடும். அதுவரை பொறுமை காக்க வேண்டும் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் சாமிமலை பிரதேச தோட்டக்கமிட்டித் தலைவர்களுக்கான கூட்டத்தில் கலந்துகொண்டு பேசியபோது இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சாமிமலை பிரதேச மக்களும் எவ்வித தொழிற்சங்க அரசியல் பேதமின்றி தமிழ் முற்போக்குக் கூட்டணியின் வேண்டுகோளுக்கிணங்க அன்னம் சின்னத்திற்கு வாக்களித்துள்ளனர். இவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். நல்லாட்சி அரசாங்கத்தில் சாமி மலைப்பிரதேசத்தில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை நாம் முன்னெடுத்ததன் காரணமாகவே இப் பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் அன்னம் சின்னத்திற்கு வாக்களித்தனர் என்பதை யாராலும் மறுக்க முடியாது. எதிர்வரும் மார்ச் முதலாம் திகதி வரை மலையகத்தில் பாரிய அபிவிருத்தித் திட்டங்களை நாம் எதிர்பார்க்க முடியாது. அடுத்த வருடம் இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலைத் தொடர்ந்து மாற்றங்களை எதிர்பார்க்கமுடியும். அதுவரை பொறுமை காக்க வேண்டும்.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் சாமிமலை பிரதான அமைப்பாளர் தெய்வேந்திரனின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் மத்திய மாகாண சபை முன்னாள் உறுப்பினர்களும் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

தலவாக்கலை குறூப் நிருபர்

Sat, 12/14/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை