ராஜிதவின் முன் பிணை மனு நிராகரிப்பு

முன் பிணை கோரி மீண்டும் மனுத்தாக்கல்

வெள்ளை வான் விவகாரத்தில் கைது செய்யப்படுவதை தடுக்கும் வகையில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்தன மீண்டும் முன் பிணை மனுவினை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்தார்.

இம் மனு மீதான விசாரணை இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரியவருகிறது.

குறித்த விவகாரம் தொடர்பாக தனக்கு முன்பிணை வழங்குமாறு கோரி ஏற்கனவே பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு கொழும்பு பிரதான நீதவானால் நிராகரிக்கப்பட்டது.

இந்த மனு நேற்று கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, இந்த முன் பிணை மனுவில் பொலிஸாரினால் கைது செய்யப்படவுள்ள குற்றம் தொடர்பில் துல்லியமாகவும் தெளிவாகவும் குறிப்பிடப்படாமையினால் குறித்த மனுவினை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள நீதிமன்றத்திற்கு முடியாது என நீதவான் குறிப்பிட்டு மனுவை நிராகரிப்பதாக அறிவித்தார்.

கடந்த ஜனாதிபதி தேர்தல் சமயத்தில் வெள்ளை வான் சம்பவம் தொடர்பாக நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பு தொடர்பில் சி.ஐ.டியினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இந்த விசாரணைகளின் அடிப்படையில் தன்னை கைது செய்வதற்காக பொலிஸார் தயாராகி வருவதாக மனுதாரரான முன்னாள் அமைச்சர்  ராஜித்த சேனாரத்ன குறிப்பிட்டிருந்தார். மனுதாரர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி நவரத்ன பண்டார ஆஜராகி சுமார் ஒன்றரை மணிநேரம் தமது தரப்பு வாதங்களை முன்வைத்தார்.

இருநபர்கள் மனுதாரரை சந்தித்து வெள்ளை வேன் கடத்தில் தொடர்பில் தங்களுக்கு தகவல் உள்ளதாக கூறியுள்ளனர். அதன் உண்மைத்தன்மை தொடர்பில் அமைச்சர் அறிந்திருக்கவில்லை. அவர்களின் கூற்றில் ஏதும் உண்மையிருக்கலாம் என்ற காரணத்தினால் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி இது தொடர்பில் பகிரங்கப்படுத்தினார்.

ஆனால் இவர்கள் குற்றச்செயல்களுடன் தொடர்புள்ளவர்கள் என்பதை அமைச்சர் அறிந்திருக்கவில்லை. தங்களுக்கு பணம் தந்து இவ்வாறு பேச வைத்தாக இருவரும் கூறியுள்ளனர். இவர்களுடைய வாக்குமூலத்திற்கமைய மனுதாரரை கைது செய்ய தயாராவதாக தெரியவந்துள்ளது. எனவே அவருக்கு முன்பிணை வழங்குமாறும் வாதிட்டனர்.

எந்த சரத்திற்கமைய முன்பிணை கோரப்படுகிறது என்பது முன்பிணை வழங்குவதில் முக்கியமானது என்று குறிப்பிட்ட நீதவான், எதிர்பார்க்கும் முன்பிணை எந்த தவறு தொடர்பில் கோரப்படுகிறது என தெளிவுபடுத்தப்படவில்லை என சுட்டிக்காட்டினார்.

வேறு தவறுகளின் போது முன்பிணையை பயன்படுத்துவதற்கு இதனூடாக சட்டபூர்வ பாதுகாப்பு கிடைக்கும். முன்பிணை வழங்க முடியாத தவறுகள் தொடர்பிலும் இந்த முன்பிணையை பயன்படுத்த முடியும். எனவே இந்த முன்பிணை மனுவை நிராகரிப்பதாகவும் நீதவான் குறிப்பிட்டார். (பா)

Sat, 12/21/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை