ஊடக சுதந்திரத்துக்கு எவ்வித அழுத்தங்களும் பிரயோகிக்கப்படாது

ஜனாதிபதி

நாட்டின் ஊடக சுதந்திரத்திற்கு தனது ஆட்சிக் காலத்தின்போது எவ்வித அழுத்தங்களும் பிரயோகிக்கப்பட மாட்டாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ உறுதியளித்தார்.

எந்தவொரு நியாயமான விமர்சனத்திற்கும் இடமுள்ளது என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், நாட்டுக்கும் நாட்டின் நற்பெயருக்கும் ஏற்றவகையில் ஊடகப் பணியில் ஈடுபடுவது மற்றும் ஊடகங்களின் மூலம் நாட்டுக்கு மேற்கொள்ளப்பட வேண்டிய பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்கு அனைத்து ஊடக நிறுவனங்களும் நடவடிக்கை எடுக்குமென தாம் எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் ஊடக நிறுவனங்களின் தலைவர்களுக்குமிடையிலான சந்திப்பு நேற்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இந்த சந்திப்பின்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் கூறுகையில்,

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் பெரும் எதிர்பார்ப்புக்களுடன் நாட்டின் ஜனாதிபதியாக என்னை தெரிவு செய்துள்ளனர். அரசியல்வாதிகளினதும் அரச அதிகாரிகளினதும் வினைத்திறனை அதிகரித்தல், ஊழலை ஒழித்தல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி என்பன அவற்றில் முக்கியமானவையாகும்.

இந்த நோக்கத்தை அடைந்துகொள்வதற்கு ஊடகங்களின் ஒத்துழைப்பு எமக்கு குறைவின்றி கிடைக்குமென நம்புகிறேன். முதலீடு மற்றும் பொருளாதார தொடர்புகளை சர்வதேச ரீதியாக கட்டியெழுப்புவதற்கு நாட்டின் நற்பெயர் கட்டியெழுப்புவது மிகவும் முக்கியமானதாகும். எனவே நாட்டின் நற்பெயரை கட்டியெழுப்புவதிலும் ஊடகங்களுக்கு முக்கிய பொறுப்பு உண்டு.

கடந்த சில நாட்களாக பேசப்படும் சுவிஸ் தூதரக அதிகாரி சம்பந்தப்பட்ட விடயத்தில் நாட்டின் ஊடகங்கள் நடந்துகொண்ட விதம் மகிழ்ச்சியளிக்கிறது. சர்வதேச ஊடகங்கள் தேவையற்ற வகையில் அந்த நிகழ்வை ஊதிப் பெருப்பிக்க முயற்சித்தன. ஆனால் அதனை சரி செய்யக்கூடிய இயலுமை எமது நாட்டு ஊடகங்களிடம் உள்ளது.

நகரங்களை அழகுபடுத்தும் வகையில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் சுவரோவியம் வரையும் நடவடிக்கையானது எவரினதும் கோரிக்கையின் பேரில் ஆரம்பிக்கப்பட்ட ஒன்று அல்ல. நாட்டை நேசிக்கும் இளைஞர்களிடையே உருவான ஆக்கத்திறன் சார்ந்த ஒரு நிகழ்ச்சித்திட்டமாகும்.

எவ்வாறானபோதும் நாட்டை நேசிக்கும் அக் குழுவினர்களை வலுவூட்டுவதற்காக ஊடகங்களின் பங்களிப்பு குறைவின்றி கிடைக்க வேண்டியது அவசியமாகும் என்றார்.

Fri, 12/13/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை