சட்டவிரோத மணல் அகழ்வு; நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்க அதிபர் பணிப்பு

அரசாங்கத்தினால் தற்போது மணல் அனுமதி பத்திரம் தளர்த்தப்பட்ட நிலையில் ஆறுகள், குளங்கள், வீதியோரங்கள் மற்றும் மணல் பாங்கான பிரதேசங்களில் மக்கள் முந்தியடித்துக் கொண்டு மணல் வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமாரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெல்லாவெளி, பட்டிப்பளை, வவு னதீவு ஆகிய பிரதேச செயலகப்பிரிவிலே இவ்வாறான சட்டவிரோத நடவடிக்கை நேற்றுமுன்தினம் (09) இடம்பெற்று வருவதை அவதானிக்க முடிந்தது.

இதனை கட்டுப்படுத்துவதற்காக மட்டக்களப்பு மாவட்ட பதில் மாவட்ட பொலிஸ் அதிகாரி எஸ்.குமாரசிறி மற்றும் விசேட அதிரடிப்படையின் இணைப்பு அதிகாரி தென்னக்கோன் அகியோருக்கு இச்சட்ட விரோத செயற்பாடுகளில் ஈடுபடுகின்ற நபர்களை சட்டத்தின் முன்னிருத்துமாறு அரசாங்க அதிபர் பணிப்புரை விடுத்தார்.

மணல் அகழ்வானது இரவு பகலாக மேற்கொள்ளபட்டு வருவதாகவும் பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் இயற்கை அனர்த்தங்கள் ஏற்படுகின்ற சந்தர்ப்பத்தில் பெரும் பாதிப்பினை எதிர் நோக்கவேண்டி வரும், அத்துடன் பாதைகள் சேதம் ஆக்கப்பட்டு வருவதும் அவதானிக்கப்பட்டது. குறிப்பாக பட்டிப்பளை பிரதேச காவல் துறையினர் இதில் பாராமுகமாக செயற்படுவதும் அங்கு அவதானிக்க முடிந்தது.

(பெரியபோரதீவு தினகரன், மணல்சேனை நிருபர்கள்)

Wed, 12/11/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை