வருமான வரி சட்டத்தில் திருத்தம்; இலகு வரிவிதிப்பு அறிமுகமாகும்

வரிச் சலுகை நேற்று முதல் அமுல்

 நாட்டு மக்களை பெரும் பாதிப்புக்குள்ளாக்கியுள்ள தேசிய வருமான வரிச் சட்டம் திருத்தம் செய்யப்படும் என்றும் அதற்குப் பதிலாக இலகுவான வரி விதிப்பு அறிமுகப்படுத்தப்படும் என்றும் தகவல் தொடர்பாடல் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அரசாங்கத்தினால் கடந்த சில தினங்களுக்கு முன் மக்களுக்கு வழங்கப்பட்ட வரிச் சலுகைகள் நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

நேற்றைய தினம் தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் விளக்கமளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இதற்கிணங்க பொருட்கள் மற்றும் சேவைகளுக்காக பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ள மறைமுக வரிச் சலுகைகள் நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாகவும் நேரடியான வரிச் சலுகை 2020 ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வரும் என்றும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நிதியமைச்சினால் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, மக்களை பாதிப்புக்குள்ளாக்கியுள்ள தேசிய வருமான வரிச் சட்டம் திருத்தம் செய்யப்படும் என்றும் அதன் மூலம் இலகுவான வரி விதிப்பு அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த வரிச் சலுகை கள்

தேர்தலை இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டதாக சிலர் தெரிவித்து வருகின்றனர். அவ்வாறில்லை.

இலங்கையின் வரலாற்றில் எந்த அரசாங்கமும் பின்பற்றாத வகையில், மக்களைப் பாதிப்புக்குள்ளாக்கும் வரிவிதிப்பையே கடந்த அரசாங்கம் நடைமுறைப்படுத்தியிருந்தது.

அவர்கள் வரி அறவீடு தொடர்பான நியதிகளுக்கு முரண்பாடான விதத்திலேயே வரி அறவிட்டுள்ளனர்.

30 வருடங்கள் யுத்தம் இடம்பெற்றபோதும் அக்காலங்களில் நடைமுறையில் இல்லாத வகையில் புறக்கோட்டை பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டன.

அந்த ஆர்ப்பாட்டங்களை நிறுத்தவேண்டிய முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க சுங்க அதிகாரிகளை சட்டபூர்வமற்ற விதத்தில் உபயோகித்து புறக்கோட்டையில் மூன்று கடைகளுக்கு 'சீல்' வைப்பதற்கு நடவடிக்கை எடுத்தார்.

அதற்கெதிராக நாம் நீதிமன்றத்திற்கு சென்றபோது நீதிமன்றம் கூட அதனை தவறு என்று ஏற்றுக்கொண்டது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். (ஸ)

Mon, 12/02/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை