இஸ்ரேலின் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் பெத்லஹாமில் கிறிஸ்மஸ் கொண்டாட்டம்

இயேசுநாதரி பிறப்பிடமாக கிறிஸ்தவர்களால் போற்றப்படும் விவிலிய நகரமான பெத்லஹாமில் கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாடுவதற்கு உலகெங்குமிருந்து நூற்றுக்கணக்கான யாத்திரிகர்கள் ஒன்றுதிரண்டுள்ளனர்.

இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் இந்த சிறிய நகரில் உள்ள இயேசு பிறந்ததாக கிறிஸ்தவர்களால் நம்பப்படும் இடத்தில் கட்டப்பட்டிருக்கும் நேட்டிவிட்டி தேவாலயத்தை சூழவே கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இந்த தேவாலயத்திற்கு வெளியே இருக்கும் சதுக்கத்தில் அமைக்கப்பட்டிருக்கும் 50 அடி உயர கிஸ்மஸ் மரத்தை ஒட்டி நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் கடந்த திங்கட்கிழமை இரவு ஒன்று திரண்டனர்.

நத்தார் தாத்தாவின் உடை அணிந்த சிறுவர்கள் அங்கு விளையாடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் அந்த சதுக்கத்தில் இடம்பெறவிருக்கும் கிரிஸ்மஸ் இசை நிகழ்ச்சிக்கான தொலைக்காட்சிகள் மற்றும் ஒலிபெருக்கிகளை பொருத்தும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

ஜெரூசலத்தின் லத்தீன் திருத்தூதர் நிர்வாக பேராயர் பீர்பட்டிஸ்டா பிசபல்லா, மத்திய கிழக்கின் ரோமன் கத்தோலிக்க உயர் அதிகாரிகள் ஜெரூசலத்தில் இருந்து நேற்றுக் காலை பெத்லஹாமை வந்தடைந்தனர். நேட்டிவிட்டி தேவாயத்தில் இடம்பெறும் நள்ளிரவு ஆராதனையை இவர்கள் முன்னின்று நடத்தவிருந்ததோடு, பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸும் இந்த நிகழ்வில் பங்கேற்கவிருந்தார்.

இந்த நேட்டிவிட்டி தேவாலயம் நான்காவது நூற்றாண்டில் கட்டப்பட்டதோடு தீயில் அழிந்ததை அடுத்து ஆறாம் நூற்றாண்டில் அது புனர்நிர்மாணம் செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது.

பெத்லஹாம் ஜெரூசலம் நகருக்கு அருகாமையில் இருந்தபோதும் இஸ்ரேலிய தடுப்புச் சுரால் இரு நகரங்களுக்கும் இடையே தடங்கல் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இம்முறை பிரார்த்தனைகளில் கடந்த முறைகளை விடவும் காசாவில் இருந்து குறைவான கிறிஸ்தவர்களே பங்கேற்கின்றனர். பெத்லஹாம் நகருக்கு வருவதற்கு சுமார் 900 காசா கிறிஸ்தவர்கள் விண்ணப்பித்தபோதும் சுமார் 200 பேருக்கே இஸ்ரேல் அனுமதி அளித்துள்ளது.

பலஸ்தீன பகுதிகளான மேற்குக் கரையும் காசாவும் இஸ்ரேலிய நிலப்பகுதிகளால் பிரிக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்த இரு பகுதிகளுக்கும் இடையிலான நடமாட்டத்திற்கு இஸ்ரேலின் அனுமதியை பெறவேண்டி உள்ளது. எனினும் அவ்வாறான அனுமதியை பெறுவது கடினமான ஒன்றாக உள்ளது.

Wed, 12/25/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை