நலன்புரி பணிகளை உடன் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி பணிப்பு

நாடு முழுவதும் சுமார் 6000 பேர் பாதிப்பு

5 மாவட்டங்களுக்கு தொடர்ந்தும் மண்சரிவு எச்சரிக்ைக

அவசர அழைப்புக்கு 117

சீரற்ற காலநிலை காரணமாக தற்போது நாட்டின் பல மாவட்டங்களிலும் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு, மண்சரிவு உள்ளிட்ட அனர்த்த நிலைமைகளின்போது பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் அவர்களது நலன்புரி தேவைகளை நிறைவேற்றுவதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தாமதமின்றி மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அரச அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

அதிக மழைவீழ்ச்சி காரணமாக ஏற்படக்கூடிய மண்சரிவு, மண்மேடுகள் சரிந்து விழுதல், கற்பாறைகள் சரிந்து விழுதல் போன்ற அனர்த்த நிலைமைகளை எதிர்கொள்வதற்காக பாதுகாப்பு அமைச்சு மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் ஆகியன ஒன்றிணைந்து அனர்த்த நிலைமைகளை கட்டுப்படுத்துவதற்கும் பணிப்புரைகள் வழங்கப்பட்டுள்ளன. 

இதே வேளை, சீரற்ற காலநிலை மற்றும் மண்சரிவு காரணமாக தொடர்ந்தும் அநேக மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு 5 மாவட்டங்களில் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது.

பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் சம்பந்தப்பட்ட அமைச்சுக்களின் அதிகாரிகள், மாவட்டச் செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் ஆகியோருக்கு சுற்றுநிருபத்தின் ஊடாக அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

அனைத்து செயற்பாடுகளின் ஒருங்கிணைப்பு மற்றும் மீளாய்வு ஆகியன பிரதமரின் தலைமையில் மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

1609 குடும்பங்கள் பாதிப்பு

இதே வேளை,சீரற்ற காலநிலை காரணமாக நாடுமுழுவதும் 1609 குடும்பங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்து 904 பேர் நேற்றுவரை பாதிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி நேற்று தெரிவித்தார்.

மண்சரிவு காரணமாக இதுவரை மூவர் உயிரிழந்துள்ளபோதும் மண்ணில் புதையுண்டு காணாமற்போன மேலுமொரு நபர் முப்படையினர் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளால் தொடர்ந்தும் தேடப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

அடை மழை மற்றும் கடுங் காற்று காரணமாக 242 குடும்பங்களைச் சேர்ந்த 915 பேர் 14 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுள் 05 பேர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். 03 வீடுகள் முழுமையாகவும் 169 வீடுகள் பகுதியளவிலும் சேதமாக்கப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை நேற்றைய தினமும் கண்டி,நுவரெலியா,கேகாலை,

இரத்தினபுரி மற்றும் பதுளை ஆகிய ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மண்சரிவு அபாயத்திலிருந்து மக்களை மீட்கும் பணிகளில் அம்மாவட்டங்களைச் சேர்ந்த அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளும் அரசாங்க அதிபர் அலுவலக அதிகாரிகளும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

சுவர்களில் அல்லது நிலங்களில் வெடிப்புக்கள் தோன்றுமாயின் திடீரென நீரூற்றுக்கள் உருவாகுமாயின் அல்லது ஏற்கனவே இருந்த நீரூற்றுக்கள் மறைவது போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அது தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளுக்கு அல்லது 117 என்ற தொலைபேசி இலக்கத்திற்கூடாக அறியத் தருமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

வலப்பனை, பதுளை- பசறை வீதி, நுவரெலியா-, வெலிமடை வீதி மற்றும் ஹல்துமுல்ல ஆகிய வீதிகளில் கற்பாறைகள் மற்றும் மண் மேடுகள் சரிந்திருப்பதனால் அவ்வீதிகளுக்கூடான வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டிருப்பதாக கூறிய கொடிப்பிலி தற்போது அவற்றை அகற்றும் பணிகள் தொடருவதாகவும் அதன் பின்னரே அவ்வீதிகளுக்கூடான வாகன போக்குவரத்து அனுமதிக்கப்படுமென்றும் தெரிவித்தார்.

மேலும் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் வாகனங்களிலும் நடந்தும் செல்பவர்கள் அவதானமாக இருக்குமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இக்காலநிலை தொடர்ந்தும் சில தினங்களுக்கு நீடிக்குமென்பதால் அனர்த்தங்களிலிருந்து மக்களை பாதுகாப்பதற்காக பொலிஸார், முப்படையினர் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் உஷார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாகவும் கொடிப்பிலி கூறினார்.

இதேவேளை அனர்த்தங்கள் காரணமாக தற்காலிக முகாம்களில் வைக்கப்பட்டிருப்பவர்களுக்கு தொடர்ந்து நிவாரணங்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

மேலும் தற்போது க.பொ.த சாதாரணதரப் பரீட்சை நடைபெற்று வருவதனால் அனர்த்தங்கள் ஏற்படக்கூடிய பகுதிகளில் மாற்று பரீட்சை நிலையங்களை உருவாக்குவதற்கான ஏற்பாடுகளை அனர்த்த முகாமைத்துவ நிலையம் பரீட்சைகள் திணைக்களத்துடன் இணைந்து முன்னெடுத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதனடிப்படையில் அனர்த்தங்களுக்கு முகம்கொடுப்போர் மற்றும் நிவாரணங்கள் கிடைக்கப்பெறாதோர் 117 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளுமாறும் கொடிப்பிலி கேட்டுக்கொண்டார்.

அத்துடன் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் அரசாங்க அதிபர்களுக்கு நிவாரணப் பணிகளை முன்னெடுப்பதற்கான நிதி ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள நிலையில் தேவையான மேலதிக நிதியை உடனுக்குடன் பெற்றுக்கொடுக்க அமைச்சு தயாராக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நீர்மட்டம் அதிகரித்த சில நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் நேற்றைய தினமும் திறந்து விடப்பட்டுள்ளன.

Tue, 12/03/2019 - 06:00


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக