வென்டேஜ் எப்.ஏ கிண்ண உதைபந்தாட்டம் குருநகர் பாடும் மீன் அணி வெற்றி

இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தினால் நடாத்தப்பட்டு வரும் வென்டேஜ் எப்.ஏ. கிண்ண உதைபந்தாட்ட தொடரில் 32 அணிகளுக்கிடையிலான போட்டியொன்றில் புத்தளம் லிவர்பூல் அணியை பலத்த போராட்டங்களுக்கு மத்தியில் பெனால்டி மூலம் வெற்றியீட்டிய யாழ்ப்பாணம் குருநகர் பாடும் மீன் (சிங்கிங் பிஷ்) உதைபந்தாட்ட கழகம் இலங்கையின் பிரபல 16 அணிகள் பங்கேற்கும் முன்னோடி கால் இறுதிக்குள் பிரவேசித்துள்ளது.

புத்தளத்தில் 64 அணிகளுக்கான போட்டியில் நீர்கொழும்பு ஜுபிட்டர்ஸ் அணியினை இலகுவான வீழ்த்திய குருநகர் பாடும் மீன் உதைபந்தாட்ட கழகம் இந்த 32 சுற்றுக்கான போட்டியில் புத்தளம் லிவர்பூல் அணியினை வெல்வதற்கு பலத்த சவால்களுக்கு முகங்கொடுக்க நேர்ந்தது. புத்தளம் லிவர்பூல் மற்றும் குருநகர் பாடும் மீன் ஆகிய அணிகள் பங்கேற்ற குறித்த 32 அணிகளுக்கான இந்த போட்டி ஞாயிற்றுக்கிழமை (22) மாலை மிகச்சரியாக 03 மணிக்கு கொழும்பு பெத்தகான விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

போட்டி ஆரம்பித்த நேரத்திலிருந்து இறுதி நிமிடம் வரைக்கும் விறு விறுப்பான ஆட்டமாக இந்த போட்டி அமைந்திருந்தது.

முதல் பாதியில் 30 வது நிமிடத்தில் குருநகர் பாடும் மீன் உதைபந்தாட்ட கழக வீரர் கெய்ன்ஸ் செலுத்திய உதையில் பந்து லிவர்பூல் வீரரினால் தடுக்கப்பட்ட நிலையில் அது சுய கோலாக மாறியதால் முதல் பாதியில் குருநகர் பாடும் மீன் 01 : 00 என்கின்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.

இரண்டாவது பாதியில் இரு பக்கமும் பலத்த சவால் நிலவியது. கோல்களை செலுத்த இரு அணியின் வீரர்களும் மும்முரமாக செயல்பட்டனர். இந்நிலையில் போட்டி நிறைவு பெறும் கடைசி நிமிடத்தில் லிவர்பூல் அணி வீரர் எம். பாஸித் தனது அணிக்கான கோலினை செலுத்தினார். இந்த கோலின் மூலம் இரு அணிகளும் தலா ஒவ்வொரு கோல்களை பெற்றிருக்க போட்டி சமநிலையில் நிறைவடைந்தால் வெற்றியை தீர்மானிப்பதற்காக பெனால்டி உதைக்கு நடுவர் அழைப்பு விடுத்தார்.

பெனால்டி உதையில் 04 : 03 கோல்களினால் குருநகர் பாடும் மீன் அணி வெற்றி கொண்டது. பெனால்டி உதையில் குருநகர் பாடும் மீன் அணிக்காக சாந்தன், கெய்ன்ஸ், விசோத், செயன் ஆகியோரும் புத்தளம் லிவர்பூல் அணிக்காக நப்லி, ரஸ்வான், ஷிபான் ஆகியோரும் கோல்களை செலுத்தினர்.

போட்டிக்கு நடுவர்களாக இலங்கை உதைபந்தாட்ட சம்மேளன நடுவர்களான புத்திக டயஸ், சமீர, குசன் இந்திக, எஸ். முருகன் ஆகியோர் கடமையாற்றினர்.

 புத்தளம் தினகரன் நிருபர்

Tue, 12/24/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை