இராணுவ பேச்சாளராக பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க நியமனம்

இராணுவ பேச்சாளராக பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க நியமனம்-Brigadier Chandana Wickremesinghe-New Army Spokesperson for SLA

- பாதுகாப்பு அமைச்சு ஊடக மையத்தின் பணிப்பாளராகவும் நியமனம்
- டிசம்பர் 17 இல் கடமையேற்பு

இலங்கை இராணுவத்தின் புதிய ஊடக பேச்சாளராகவும், பாதுகாப்பு அமைச்சின் ஊடக மையத்தின் பணிப்பாளராகவும் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வாவினால்  இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த இரு பதவிகளிலும் இருந்த, இலங்கை இராணுவ பொறியியல் காலாற்படையின் கட்டளை தளபதியான மேஜர் ஜெனரல் சுமித் அத்தபத்து, இம்மாதம் 17ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இராணுவ தலைமையத்திற்கு இணைக்கப்பட்டுள்ளதை அடுத்து ஏற்படும் வெற்றிடத்திற்கே பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை இராணுவத்தின் கஜபா படையணியைச் சேர்ந்த பிகேடியர் சந்தன விக்ரமசிங்க பேராதனை பிரதேசத்தை பிறப்பிடமாகக் கொண்டவர், மாத்தளை, விஜய கல்லூரி மற்றும் கண்டி தர்மராஜா கல்லூரியின் பழைய மாணவரான இவர் 1989ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தில் இணைந்து தியத்தலாவை இராணுவ அகடமியில் தனது அடிப்படை பயிற்சிகளை முடித்துக் கொண்டு இராணுவ அதிகாரியாக வெளியேறினார்.

இராணுவத்தின் கஜபா ரெஜிமண்ட் உட்பட பல்வேறு பிரிவுகளில் உயர் பதவிகளை வகித்த இவர் கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பயிற்சிப் பிரிவின் கட்டளை அதிகாரியாகவும் அப்பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு மற்றும் மூலோபாய கற்கை பீடத்தின் பீடாதிபதியாகவும் சேவையாற்றினார்.
கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழகம், கொழும்பு பல்கலைக்கழகம், சபுகஸ்கந்தையிலுள்ள பாதுகாப்பு சேவைகள், கட்டளைகள், பதவிநிலை அதிகாரிகள் கல்லூரி உட்பட இந்தியா, உகண்டா ஆகிய நாடுகளில் பாதுகாப்பு துறைசார் கற்கைகளையும் மேற்கொண்டுள்ளார்.

உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெற்ற பாதுகாப்புத் துறைசார்ந்த மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகளில் கலந்து கொண்ட இவர் சிறந்த ஒரு எழுத்தாளராவார். இவரது ஆக்கங்கள் பல வெளிநாடுகளின் பாதுகாப்பு துறைசார் வெளியீடுகளில் பிரசுரிக்கப்பட்டுள்ளன. 

இறுதியாக கொரியாவிலுள்ள தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு துறை உயர் கற்கை நெறியை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு நாடு திரும்பும் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க இராணுவத்தின் புதிய பேச்சாளராகவும் இராணுவ ஊடக பணியகத்தின் பணிப்பாளராகவும் எதிர்வரும் 17ஆம் திகதி தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஸாதிக் ஷிஹான்

Sun, 12/08/2019 - 18:56


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை