கிழக்கு மக்கள் - புதிய அரசு இடைவெளியை குறைக்கும் முயற்சி

கிழக்கு மக்கள் - புதிய அரசு இடைவெளியை குறைக்கும் முயற்சி-Anuradha yahampath

வெற்றியளிக்கும் என்கிறார் கிழக்கு ஆளுநர்

தற்போதைய அரசாங்கத்தினதும் புதிய ஜனாதிபதியினதும் பிரதிநிதியாக இங்கு விஜயம் செய்துள்ள நான், இந்த மாகாண மக்களுக்கும் புதிய அரசாங்கத்திற்குமிடையிலான இடைவெளியை குறைப்பதற்கு மேற்கொண்டுள்ள முயற்சிகள் வெற்றியளிக்குமென்ற நம்பிக்கை கொண்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் சட்டவிரோத கட்டடங்கள் மற்றும் முறையற்ற சுற்றுமதில்களினால் தான் வெள்ளநீர் வடிந்து செல்லமுடியாமல் அனர்த்தம் ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் நீண்டகால அடிப்படையிலான திட்டங்களின்மூலம் நிரந்தரத் தீர்வைக்காண வேண்டியுள்ளதாகவும் அவர் கூறினார். 

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு (25) விஜயம் செய்த கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா, வெள்ள அனர்த்தத்தினால் வெகுவாகப் பாதிக்கப்பட்டு தரைவழிப்போக்குவரத்து துண்டிக்கப்பட்ட ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகப்பிரிவிலுள்ள சித்தாண்டிமற்றும் கிரான் செயலகப்பிரிவிலுள்ள புலிபாய்ந்தகல்ஆகிய பகுதிகளைப் பார்வையிட்டார். 

அத்துடன் சித்தாண்டி பகுதியில் வெள்ளம் காரணமாக இடம்பெயர்ந்து பொதுக்கட்டடங்களில் தற்காலிகமாகத் தங்கியிருந்த 254 குடும்பங்களுக்கு முதற்கட்டமாக உலருணவுப்பொதிகளைக் கையளித்தார். 

இந்நிகழ்வு சித்தாண்டி ஸ்ரீ இராம கிருஷ்ண வித்தியாலய மண்டபத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் எம். உதயகுமார் தலைமையில் நடைபெற்றது. 

பிரதேச செயலாளர் நல்லையா வில்வரெட்ணம் மற்றும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப் பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.சியாத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.  

இப் பிரதேசத்தில் 637குடும்பங்கள் இடம்பெயர்ந்தன.   ஏனையவர்களுக்கு அடுத்தகட்டமாக உலருவுப்பொருட்கள் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏறாவூர் குறூப் நிருபர்

Thu, 12/26/2019 - 10:53


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை