டிரம்ப் மீதான குற்றச்சாட்டில் மற்றொரு ஆதாரம் அம்பலம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடந்த ஜூலை மாதம் உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கியுடன் தொலைபேசியில் உரையாடி 91 நிமிடங்களுக்குப் பின் உக்ரைனுக்கான நிதியை அமெரிக்கா முடக்கி இருப்பதாக புதிதாக வெளியாகி இருக்கும் அரசாங்க மின்னஞ்சல் ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த தொலைபேசி உரையாடலிலேயே தனது அரசியல் போட்டியாளரான ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடனுக்கு எதிராக விசாரணை நடத்த உக்ரைன் ஜனாதிபதிக்கு டிரம்ப் அழுத்தம் கொடுத்ததாக குற்றம்சாட்டப்படுகிறது.

தனது தனிப்பட்ட அரசியல் இலாபத்திற்காக பதவியை பயன்படுத்தியதாக டிரம்ப் மீது ஜனநாயகக் கட்சியினர் குற்றம்சாட்டுகின்றனர்.

டிரம்ப் மீது அமெரிக்க பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டிருக்கும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு இந்த தொலைபேசி உரையாடலே மூலகாரணமாக உள்ளது.

அமெரிக்காவில் ஊழலுக்கு எதிரான செயல்பாட்டாளர் ஒருவர் இந்த உரையாடல் குறித்து கவலை தெரிவித்ததே முதன் முதலில் ஜனாதிபதி டிரம்ப் மீதான குற்றச்சாட்டை விசாரிக்கத் தூண்டியது.

கடந்த புதன்கிழமை ஜனநாயக கட்சியினரின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதிநிதிகள் சபையில் முறையாக குற்றம்சாட்டு நிறைவேற்றப்பட்டாலும், வரும் நாட்களில் ஆளும் குடியரசுக் கட்சிக்கு பெரும்பான்மை உள்ள அமெரிக்க பாராளுமன்றத்தின் செனட் சபையில் பதவிநீக்க நடவடிக்கை விசாரணைக்கு வரும் என்பதால் ஜனாதிபதி டிரம்ப் பதவியில் இருந்து நீக்கப்பட வாய்ப்பில்லை.

நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து சென்டர் பார் பப்ளிக் இன்டகிரிட்டி எனும் அமைப்பால், தகவல் பெறும் உரிமையின் அடிப்படையில் இந்த மின்னஞ்சலில் உள்ள தகவல்கள் பெறப்பட்டுள்ளன.

ஜூலை மாதம் 25ஆம் திகதி, சேலன்ஸ்கி மற்றும் ஜனாதிபதி டிரம்ப் இடையேயான 91 நிமிட கலந்துரையாடலுக்கு பின்னர் வெள்ளை மாளிகையின் உயர் அதிகாரியான மைக் துவ்வே, உயர் பாதுகாப்பு அதிகாரிகளை தொடர்பு கொண்டு உக்ரைனுக்கு வழங்கும் உதவிகளை நிறுத்தியுள்ளார், என்று இந்த மின்னஞ்சல் மூலம் தெரியவருகிறது.

சேலன்ஸ்கியிடம் ஜனாதிபதி டிரம்ப் “எனக்கு ஓர் உதவி செய்யுங்கள்” என்று கேட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, 2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலின் ஜனநாயக கட்சி வேட்பாளராக அதிக வாய்ப்புள்ள ஜோ பைடன் மற்றும் அவரின் மகன் ஹண்டர் பைடன் ஆகியோரின் மீது விசாரணை நடத்த வேண்டும் என்று உதவி கேட்டுள்ளார் என்பது தொலைபேசி அழைப்பின் எழுதப்பட்ட நகல் மூலம் தெரியவருகிறது.

Tue, 12/24/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை