அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்களும் கைகோர்ப்பு

மட்டு. மாவட்டத்தில் துரித நிவாரண பணி

சீரற்ற காலநிலையால் மட்டக்களப்பு மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க அரசாங்கத்தின் பணிப்புரைக்கமைய உள்நாட்டு, வெளிநாட்டு தொண்டு நிறுவனங்களை இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டங்களை வகுக்கும்பொருட்டு நேற்றுமுன்தினம் (௦ 7 ) மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் தலைமையில் அனைத்து தொண்டு நிறுவனங்களையும் அரச திணைக்களங்களின் உள்ளூர் தலைவர்களையும் அழைத்து விசேட கூட்டம் நடாத்தப்பட்டு இந் நிறுவனங்களூடாக எவ்வித பாரிய அனர்த்தங்கள் வந்தாலும் எடுக்கப்பட வேண்டிய முன்னாயத்தங்கள்பற்றிய திட்டங்கள் வகுக்கப்பட்டன.

இதன்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலருணவு உதவிகளை மாவட்டத்திலுள்ள பலநோக்கக் கூட்டுறவுச் சங்கங்களூடாக விநி யோகிக்கவும், ஏனைய உணவுவகைகள், பால்மா, சுகாதார மற்றும் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றவும் இங்கு செயல் படும்தொண்டு நிறுவனங்கள் அரசாங்க அதிபர் உதயகுமாரின் வேண்டு கோளையேற்று இணங்கிக்கொண்டன. இவ் விசேட கூட்டத்தில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த், பிரதம கணக்காளர் கே.ஜெகதீஸ்வரன், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர். ஏ.சி.எம். சியாத், மாவட்ட செயலக கணக்காளர் கே.பிரேம்குமார் உட்பட பல திணைக்கள தலைவர்களும் தொண்டு நிறுவனங்களின் பிரதி நிதிகள் பலரும் பிரசன்னமாகியிருந்தனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் (07) வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள 12 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் 15,019 குடும்பங்களைச் சேர்ந்த 51,433 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக 12 இடைத்தங்கல் முகாம்களில் 1,915 பேர் தங்கியிருப்பதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய அறிக்கை தெரிவிக்கின்றது.

மட்டக்களப்பு சுழற்சி நிருபர்

Mon, 12/09/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை