மலையக மக்களுக்கு நானே அதிகளவான சேவைகளை செய்துள்ளேன்

பொதுத்தேர்தலில் மக்கள் தவறிழைக்கமாட்டார்கள்

தொண்டமான், திகாம்பரம் ஆகியோரை விடவும் மலையக மக்களுக்கு நானே அதிக சேவைகளை செய்துள்ளேன். எனினும் அபிவிருத்திகளை அனுபவித்துக்கொண்டு ஜனாதிபதி தேர்தலில் மக்கள் எம்மை ஏமாற்றிவிட்டனர் என இராஜங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஜனாதிபதி தேர்தலின் போது வடக்கு, கிழக்கு மக்களும், முஸ்லிம்களும், மலையக மக்களும் ஜக்கிய தேசியக்கட்சிக்கே வாக்களித்தனர்.

அதில் சொற்ப அளவானவர்களே எம்மை ஆதரித்தனர்.

முஸ்லிம் மக்களுக்காக ராஜபக்‌ஷமார்கள் பல சேவைகளை செய்தனர். அனைத்து முஸ்லிம் தலைவர்களுக்கும் அமைச்சுப் பதவிகளை கூட வழங்கியிருந்தார். பலஸ்தீன விவகாரத்தில் மக்கள் பக்கம் நின்றார்கள்.எனினும் முஸ்லிம் மக்களும் எமக்கு வாக்களிக்கவில்லை.

கண்டி மாவட்டத்தில் தோட்டத்தொழிலாளர்களுக்கு காபர்ட் வீதி அமைத்துக்கொடுத்தேன், வீடுகளை அமைத்துக்கொடுத்தேன், தண்ணீர், மின்சாரம் என எல்லா வசதிகளையும் செய்துகொடுத்தேன். தொண்டமான், திகாம்பரம் ஆகியோரைவிடவும் கூடுதல் வேலைகளை செய்துள்ளேன். இருந்தும் இவர்களும் மாற்று தரப்புக்கே வாக்களித்தனர்.

தாம் எடுத்த முடிவு தவறு என்பதை சிறுபான்மையின மக்கள் இன்று உணர ஆரம்பித்துள்ளனர். அடுத்த பொதுத்தேர்தலில் தவறிழைக்கமாட்டார்கள் என்ற நம்பிக்கை இருக்கின்றது என அவர் தெரிவித்தார்.

(கினிகத்தேனை தினகரன் நிருபர்)

Wed, 12/11/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை