தரக் குறைவான மிளகு ஏற்றுமதியில் மோசடி

வியட்நாமிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட தரக்குறைவான மிளகை கடந்த அரசாங்கத்தில் சில வர்த்தகர்கள் முன்னாள் அமைச்சரின் உதவியுடன் இலங்கை - இந்திய சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை தவறாக பயன்படுத்தி இந்தியாவுக்கு மீள் ஏற்றுமதி செய்திருப்பதாக இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

ஊடக அமைச்சில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

மேலும் கூறுகையில், கடந்த அரசாங்கத்தில் முன்னெடுக்கப்பட்ட இச் செயற்பாடுகள் காரணமாகவே உள்ளூர் சந்தையில் மிளகின் விலை வீழ்ச்சியடைந்தது.  புதிய அரசாங்கம் இவ் வர்த்தகத்தில் ஈடுபட்டவர்களை கைதுசெய்து விவசாயிகள் மற்றும் சிறு ஏற்றுமதியாளர்களை பாதுகாக்க முன்வந்திருக்கிறது.

இதேவேளை வருடந்தோறும் நாட்டுக்கு 138 மெ.டொ கொட்டைப்பாக்கு, 199 மெ.டொ மிளகு, 220 மெ.டொ கறுவா, 48 மெ.டொ கிராம்பு, 801 மெ.டொ இஞ்சி, 5,390 மெ.டொ மஞ்சள் என்பன இறக்குமதி செய்யப்படுகிறது. இதுபோன்ற இறக்குமதியால் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் பாரிய சிரமங்களை எதிர்கொள்வதாகவும் அவர்களை பாதுகாப்பதற்காகவே இறக்குமதியை கட்டுப்படுத்தும் வகையில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.  இலங்கை மிளகு ஏற்றுமதி செய்யும் ஒரு நாடு.  எனினும் கடந்த அரசாங்கத்தில் வியட்நாமிலிருந்து குறைந்த விலைக்கு மிளகு இறக்குமதி செய்யப்பட்டு அவை இலங்கை எனும் பெயருடன் இந்தியாவுக்கு மீள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. மிளகு உள்ளிட்ட பொருட்களின் இறக்குமதி தொடர்பான ஒழுங்குவிதிகள் ஏற்றுமதி இறக்குமதி கட்டுப்பாட்டாளர் நாயகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றார்.

Sat, 12/07/2019 - 09:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை