சீரற்ற காலநிலையினால் மண்மேடு சரிந்து விழும் அபாயம்

சீரற்ற காலநிலை காரணமாக மாத்தளை மாவட்டத்தில் பல இடங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது.

அந்தவகையில் அம்பன்கோரள பிரதேசசெயலகத்திற்குட்பட்ட நாகல தோட்டத்தில் குடியிருப்புகள் மீது மண்மேடு, கற்கள் சரிந்துவிழும் அபாயம் உள்ளதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

நாகல தோட்டத்தில் தொடர் குடியிருப்புகளில் 34 குடும்பங்களைச் சேர்ந்த 134 பேர் வசித்துவருகின்றனர்.

இக்குடியிருப்புக்கு அருகிலுள்ள மலையிலிருந்து கற்பாறைகள் சரிந்துவிழும் அபாயம் இருப்பதாக பல வருடங்களுக்கு முன்னர் தேசியகட்டட ஆய்வு நிலையத்தினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. எனினும் அவர்களுக்கு மாற்று இடங்கள் இதுவரை வழங்கப்படாமையால் தொழிலாளர்கள் தொடர்ந்து அப்பகுதியிலேயே வசித்துவருகின்றனர்.

மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினிகவிரத்ன, மாத்தளை மாவட்ட மேலதிக செயலாளர் இஷான் விஜயதிலக ஆகியோர் நேற்றுமுன்தினம் இப்பகுதிக்கு விஜயம் செய்திருந்தனர்.

இதுதொடர்பில் ரோஹினி கவிரத்ன எம்.பி கருத்து தெரிவிக்கையில், குறித்த தோட்ட மக்களுக்கு மாற்று இடங்கள் வழங்குவதாக அரச நிறுவனங்கள் கடந்த காலத்தில் உறுதியளித்துள்ள போதும் அது நடைமுறைப்படுத்தப்படவில்லையெனவும், இது தொடர்பில் மாவட்ட அபிவிருத்திக் கூட்டத்தில் கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

(மாத்தளை சுழற்சி நிருபர் )

Wed, 12/11/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை