மிதக்கும் சந்தை உட்பட மூன்று பொருளாதார மையங்கள் பெருவீழ்ச்சி

கடந்த ஆட்சியாளர்களின்  முறையற்ற வேலைத்திட்டங்கள்

அசுத்த நிலைக்கு உள்ளாகியுள்ள கொழும்பு புறக்கோட்டை மிதக்கும் சந்தை உட்பட மூன்று முக்கிய பொருளாதார மையங்களும் பெரும் வீழ்ச்சி அடைவதற்கு கடந்த ஆட்சியாளர்கள் முன்னெடுத்த முறையற்ற வேலைத்திட்டங்களே காரணம் என்று நாடெங்கிலுமுள்ள

39 வர்த்தக சங்கங்களையும் இரண்டு இலட்சத்து 65 ஆயிரம் அங்கத்தவர்களையும் உள்ளடக்கியுள்ள கொழும்பு வர்த்தக சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

2015 _ -- 2019 வரையான காலப்பகுதியில் புறக்கோட்டை பிரதேசத்தின் வர்த்தக நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கு எவ்வித வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்படவில்லை என்று குறிப்பிட்ட இச்சங்கத்தின் பொதுச்செயலாளர் சமிந்த விதானமககே கடந்த நாலரை வருட கால ஆட்சியில் பெரிதும் வீழ்ச்சியடைந்த இந்த மூன்று பொருளாதார மையங்களையும் மீண்டும் கட்டியெழுப்பி வர்த்தக நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கு முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் அடங்கிய யோசனைகளை இன்று (2 ஆம் திகதி) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடமும், பிரதமரும் நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷவிடமும் கையளிக்க உள்ளோம் என்றார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், கொழும்பின் மூன்று முக்கிய பொருளாதார மையங்களாக விளங்கும் புறக்கோட்டை மிதக்கும் சந்தை, புறக்கோட்டை உலக சந்தை, தங்க நகைகள் மற்றும் ஆபணங்கள் விற்பனைக்கான சர்வதேச மத்திய நிலையம் (Gold Center) ஆகிய மூன்றும் முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் கீழிருந்த நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழேயே இருந்தன.

ஆனால் இந்நிறுவனங்களை ஒழுங்குமுறையாகப் பராமரித்தல் மற்றும் மேம்படுத்துதல் தொடர்பில் கடந்த ஆட்சிக்காலத்தில் எவ்வித கவனமும் செலுத்தப்படவில்லை. இதன் விளைவாக இம்மையங்கள் வீழ்ச்சி அடைந்து விற்பனைக்கூடங்கள் மூடப்படும் நிலைக்கு உள்ளாகியுள்ளது.

திண்மக்கழிவுகள் ஒழுங்குமுறையாக அப்புறப்படுத்தப்படுவதுமில்லை.

ஆனால் லேக்ஹவுஸ் நிறுவனத்திற்கு முன்பாக இருந்து வொக்ஷால் வீதி வரையும் பயணிக்கவென நூறு மில்லியன் ரூபாவை செலவிட்டு பேரவெவவில் படகு சேவையை ஆரம்பித்தனர்.

இத்திட்டம் எந்த சாத்தியக்கூற்று அறிக்கையின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டதோ தெரியவில்லை.

வாகன நெரிசலைத் தவிர்ப்பதற்கான திட்டம் என்றால் கூட லேக் ஹவுஸ் நிறுவனத்திற்கு முன்பாக இருந்து வொக்ஷால் வீதி வரை என்பது பெரியதொரு பிரதிபலன் கிடைக்கப்பெறவில்லை. வாகன நெரிசலும் குறைவடையவில்லை. அந்நிதியை இந்த மூன்று பொருளாதார மையங்களுக்கும் செலவிட்டிருந்தால் கூட அவை தற்போதைய நிலைக்கு உள்ளாகி இராது.

மிதக்கும் சந்தையானது உல்லாசப் பயணிகளைக் கவரும் வகையில் அவர்களை இலக்கு வைத்து தான் ஆரம்பிக்கப்பட்டது. அங்கு 105 கடைகள் உள்ளன. ஆனால் கடந்த ஆட்சிக்காலத்தில் முன்னெடுக்கப்பட்ட பிழையான வேலைத்திட்டங்களால் இன்று 8 கடைகள் மாத்திரம் தான் திறந்திருக்கின்றது என்றும் அவர் மேலும் கூறினார்.

 மர்லின் மரிக்கார்

Mon, 12/02/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை