மட்டு.,அம்பாறை மாவட்டங்களில் அடை மழை; வான் கதவுகள் திறப்பு

தாழ்நிலங்களில் வெள்ளம்  போக்குவரத்து, கடற்றொழில் பாதிப்பு

பெரியபோரதீவு தினகரன் நிருபர்

மட்டக்களப்பு மாவட்டத்தில் பரவலாகப் பெய்துவரும் அடைமழை காரணமாக மாவட்டத்தின் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக மக்கள் இடம்பெயர்ந்து வாழ்ந்து வருவதோடு, பலத்த அசௌகரியங்களையும் எதிர்கொள்ள நேர்ந்துள்ளது.

இந்நிலையில் உன்னிச்சை, நவகிரி, உறுகாமம், கட்டுமுறிவு, வெலிக்காக்கண்டி ஆகிய குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டு மேலதிக நீர் வெளியேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன. போரதீவுப்பற்றுப் பிரதேசத்தில் அமைந்துள்ள பெரியபோரதீவு பெரியகுளம், கோவில்போரதீவுக்குளம், வெல்லாவெளிக்குளம், பொறுகாமம் குளம், பழுகாமம் குளம், வட்டிக்குளம், மற்றும் தும்பங்கேணிக்குளம், உள்ளிட்ட சிறியகுளங்கள் அனைத்தும் நிரம்பி வழிவதையும் அவதானிக்க முடிகின்றது.

தொடர்ந்து மழை பெய்து வருவதோடு, நேற்று (04) காலையிலிருந்து மழையுடன் பலத்த காற்றும் வீசிவருகின்றது. இதனால் மக்கள் வெளிப் பிரதேசங்களுக்குச் செல்வதற்கும், தமது அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்வதிலும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் வெல்லாவெளி – மண்டூர் பிரதான வீதி, விவேகானந்தபுரம் - காக்காச்சுவட்டை வீதிகளை ஊடறுத்து வெள்ள நீர்பாய்வதனால் அவ்வீதியைப் பயன்படுத்துவோர் பலத்த சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.

போரதீவுப்பற்றுப் பிரதேசத்தின் பட்டாபுரம், பெரியபோரதீவு, பழுகாமம், வேத்துச்சேனை போன்ற பல தாழ் நிலப் பகுதிகளிலும் உள்ளுர் வீதிகளிலும், வெள்ளநீர் தேங்கி நிற்பதனால் அப்பகுதிகளிலுள்ள பொதுமக்களும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

வெள்ளநீரை வெளியேற்றும் பணியில் போரதீவுப் பற்றுப் பிரதேச செயலகம் மற்றும் போரதீவுப் பற்றுப் பிரதேச சபையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

அடைமழையினால் வேள்ளாண்மைச் செய்கை உள்ளிட்ட அனைத்து பயிரினங்களும் வெள்ளத்தில் அள்ளுண்டு பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 1651 குடும்பங்களுக்கு மேற்பட்ட 5774 இற்கு மேற்பட்டோர் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நலன்புரி நிலையங்களில் தங்கியிருப்பவர்களுக்கு சமைத்த உணவும், உறவினர் வீடுகளில் தங்கியிருப்பவர்களுக்கு உலருணவும் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

நேற்று புதன்கிழமை (04) காலை 8.30 மணியுடன் அதிகளவு மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிலையத்தின் பொறுப்பதிகாரி க.சூரியகுமாரன் தெரிவித்தார்.

அந்த வகையில் மட்டக்களக்களப்பு நகர் பகுதியில் 23.1 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், நவகிரிப் பகுதியில் 35.2 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும் வாகனேரிப் பகுதியில் 44.6 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும், கிரான் பகுதியில் 50.7 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், பதிவாகியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தில்...

(அட்டாளைச்சேனை தினகரன், பனங்காடு தினகரன் நிருபர்கள்)

அம்பாறை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் அடைமழை காரணமாக தாழ்நிலப் பிரதேசங்கள் பல நீரில் மூழ்கியுள்ளன. இதனால் மக்களின் இயல்பு நிலை பெரிதும் பாதிப்படைந்துள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் தாழ்நிலப் பகுதிகளில் வசித்து வந்த பெருந்தொகையான பொதுமக்களின் குடியிருப்புக்களில் மழை நீர் புகுந்தமையால் அவர்கள் உறவினர்களின் வீடுகளில் இடம்பெயர்ந்துள்ளதோடு, குறிப்பிட்ட சில பிரதேசங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தற்காலிக முகாம்களில் இடம்பெயர்ந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிடுகின்றது.

கடந்த 24 மணித்தியாலங்களில் அம்பாறை மாவட்டத்தின் பதியத்தலாவ பகுதியில் 36.8 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி அதிகப்படியாக பதிவாகியுள்ளது. மகாஓயா பிரதேசத்தில் 25.5 மிலிலி மீற்றர் மழை வீழ்ச்சியும், அம்பாறை பகுதியில் 24.4 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், இங்கினியாகல பகுதியில் 22.0 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், லகுகல பகுதியில் 19.3 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், பொத்துவில் பிரதேசத்தில் 19.1 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட அலுவலகம் தெரிவிக்கின்றது.

இம்மாவட்டத்தின் பல பகுதிகளில் அவ்வப்போது இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்கின்றபோது பலத்த காற்றும் வீசி வருகின்றது.

கடல் கொந்தளிப்பு காரணமாக அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களின் கடல் அலை சுமார் பத்து அடிக்கு மேல் எழுவதாகவும் தமது வாழ்வாதாரம் முற்றாக பாதிப்படைந்துள்ளதாகவும் கடற்றொழிலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

காரைதீவு குறூப் நிருபர்

 

காரைதீவுக் கிராமம் வெள்ளத்தில் மூடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பிரிவுகளுக்கு காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் நேரடியாக விஜயம்செய்து பார்வையிட்டதோடு வெள்ளம் வடிந்தோடும் வண்ணம் பல வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகிறார். காரைதீவுக் கிராமத்தில் மட்டும் 654 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 28 குடும்பங்கள் இடம்பெயர்ந்து உறவினர்களின் வீடுகளில் தஞ்சமடைந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

 

Thu, 12/05/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை