அதிகாரப் பகிர்வினைக் காட்டிலும் வாழ்க்ைகத்தர மேம்பாடே வசியம்

தமிழ், முஸ்லிம் மக்கள் அரசுடன் இணைந்து செயற்பட முன்வர வேண்டும்

அரசாங்கத்தை சரியாக வழிநடத்த ஊடகங்களுக்கு முழுச் சுதந்திரம் -ஜனாதிபதி

நாட்டின் நலன் கருதி தமிழ், முஸ்லிம் மக்கள் அரசுடன் இணைந்து செயற்பட முன்வர வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ மீண்டும் அழைப்பு விடுத்தார்.தமிழ், முஸ்லிம் மக்கள் எனக்கு வாக்களிக்காவிட்டாலும் நாட்டு மக்கள் அனைவருக்கும் நான்தான் ஜனாதிபதி. எனவே நாட்டை முன்னேற்ற தமிழ், முஸ்லிம் மக்கள் அரசுடன் இணைந்து செயற்பட முன்வரவேண்டுமென மீண்டும் அழைப்பு விடுக்கிறேன் என ஜனாதிபதி தெரிவித்தார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்ற பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் இலத்திரனியல் ஊடகப் பணிப்பாளர்கள் ஆகியோருடனான சந்திப்பின் போதே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ இதனைக் கூறினார்.

மேலும் ஜனாதிபதி குறிப்பிட்டதாவது, தமிழ் மக்களுக்கு சுதந்திரமாக வாக்களிக்க தமிழ் கட்சிகள் வாய்ப்பளிக்கவில்லை. முஸ்லிம் கட்சிகளும் அவ்வாறே செய்தன. எனினும் சிங்கள மக்கள் தனித்து வாக்களித்தனர். நாட்டில் நல்லிணக்கம் ஏற்பட தேசிய பாதுகாப்பு முக்கியமானது. அதேபோல அபிவிருத்தி மூலமும் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும். தேசிய ஒற்றுமையை அபிவிருத்தி மூலந்தான் உருவாக்கலாமென்பதே எமது நிலைப்பாடு. தொழிற்கல்வி, கைத்தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தி இவைகளுக்குத் தீர்வு காணமுடியும். கடந்த எழுபது வருடங்களுக்கு மேலாக மக்கள் ஏமாற்றப்பட்டே வந்துள்ளனர். அது தருவேன்,இது தருவேன் எனக் கூறப்பட்டு மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். முடியாத விடயங்களையெல்லாம் கூறி, மக்களை ஏமாற்றியுள்ளனர். சாதாரண மக்களுக்கு அதிகாரப் பகிர்வு பற்றிய ஆலோசனை எதுவுமில்லை. அவர்கள் அபிவிருத்தியையே எதிர்பார்க்கின்றனர்.

காணாமல்போனோர் விவகாரம்

காணாமல்போனோர் தொடர்பான விடயத்தை வைத்து சிலர் அரசியல் நடத்துகிறார்கள். இரு தரப்பிலும் ஏராளமானோர் காணாமல்போயுள்ளனர். யுத்தத்தின் போது சுமார் ஐயாயிரம் படைவீரர்கள் காணாமல் போயுள்ளனர். யுத்தத்தில் மரணித்தவர்களின் சடலங்கள் மீட்கப்படவில்லை. சில சடலங்கள் சிதைந்ததால் அவைகளை மீட்கவே முடியவில்லை. இவைகளும் காணாமால்போனோர் பட்டியலில்தான் இருக்கின்றன.

முகமாலையில் 129 படை வீரர்கள் கொல்லப்பட்டனர். இவர்களின் சடலங்கள் அனைத்தும் புலிகளின் தாக்குதலில் முற்றாக சிதைவடைந்த நிலையில் செஞ்சிலுவைச் சங்கம் அவற்றை அரசிடம் ஒப்படைக்கக் கொண்டு வந்தது. என்றாலும் நாம் அதனை ஏற்கவில்லை. உறவினர்களிடம் ஒப்படைக்குமளவிற்கு அவைகள் அடையாளம் காணமுடியாதவாறு சிதைவடைந்திருந்தன. இவர்களையும் காணாமல்போனதாகவே படைவீரர்களின் உறவினர்கள் கருதுகின்றனர். இவ்வாறான நிலையில் காணாமல்போனோரின் உறவினர்களை வைத்து அரசியல் செய்வது நல்லதல்ல.

காணாமற்போனோர் பிரச்சினை அரசியல் மயமாக்கப்பட்டமையினால் மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. வடக்கில் உள்ள சில அரசியல் குழுக்கள் தமது அரசியல் அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக இந்த பிரச்சினையை உபயோகித்து வருகின்றனர்.

நாட்டின் தேசிய பாதுகாப்பு பலப்படுத்தப்படும் போதே தேசிய ஒற்றுமை பேணப்படும். நாட்டின் பாதுகாப்பு முதலிடம் வகிப்பதோடு, அதற்கான சூழல் உறுதியாக கட்டியெழுப்பப்படும்.

முப்படைத் தளபதிகள், புலனாய்வுத்துறை பிரதானிகள் தொடர்பில் தான் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளதோடு, அரசாங்கத்தின் கொள்கைகள் தொடர்பில் அவர்கள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதுவரை ஆட்சிபுரிந்த அனைத்து அரசாங்கங்களும் அரசியல் இலாபம் கருதியே அதிகார பகிர்வு தொடர்பில் கதைத்தனர். அனைத்து பிரஜைகளும் கௌரவமாக வாழவேண்டுமாயின் அவர்களுக்கான தொழில், பிள்ளைகளுக்கான கல்வி மற்றும் சிறந்த சுகாதார வசதிகள் அவர்களுக்கு கிடைக்கப்பெற வேண்டும். எனவேஅதிகாரப் பகிர்வினைக் காட்டிலும் சிறந்த வாழ்க்கைத் தரத்தினை ஏற்படுத்த வேண்டியதே மக்களின் தேவையாகும்.

இங்கு எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த அவர் ,

அரசாங்கம் ஒன்றினை சரியான பாதையில் வழிநடத்த ஊடகங்களும் அழுத்தங்களை பிரயோகிக்க முடியும். விமர்சனங்களை எதிர்பார்க்கும் அதேவேளை, அவை அரசாங்கத்தின் பயணத்திற்கு பக்கபலமாக அமையும். அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஊடகங்கள் உண்மையான விடயங்களையே வெளிப்படுத்த வேண்டும்.

தற்போதையஅரசாங்கம் அரச ஊடக நிறுவனங்களும் சுயாதீனமாகவும் சுதந்திரமாகவும் செயற்படக்கூடிய சூழலை உருவாக்கி வருகிறது. மக்களிடம் அரசாங்கத்தின் செய்திகளை மாத்திரம் கொண்டு செல்வதனூடாக அரச ஊடகங்கள் பக்கச் சார்பாக செயற்படும் சூழல் உருவாகும். நடுநிலையான ஊடகப் பணியை ஆற்றவேண்டியது அவர்களது கடமையாகும்.

அரச சேவையானது வினைத்திறனான மக்கள் நேய சேவையாக விரைவில் மாற்றம் பெறவேண்டும். இதன் பொருட்டு எமது கொள்கைப் பிரகடனத்தில் முன்மொழியப்பட்டுள்ள விடயங்கள் மற்றும் அரசாங்கத்தின் குறிக்கோள்களை அறிந்து செயற்படுமாறு அரச அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுக்கிறேன்.

வரிச்சலுகை

அரசாங்கத்தினை பொறுப்பேற்ற மிக குறுகிய காலத்திற்குள் பல்வேறு சலுகைகளை வழங்கியுள்ள போதிலும் அதன் நன்மைகள் இன்னும் மக்களை சென்றடையவில்லை.

வரிக் குறைப்பு காரணமாக பல நிறுவனங்கள் பெருமளவு இலாபத்தினை பெற்றுக் கொண்டுள்ள போதிலும், மக்களுக்கு அந்த நன்மைகள் இன்னும் கிடைக்கவில்லை. அரசாங்கம் வழங்கிய வரிச் சலுகை காரணமாக இரும்பு ஆணியின் விலைக்கூட குறைவடைய வேண்டும்.

வரிச் சலுகைகளின் நன்மைகளை மக்களுக்கு பெற்றுக் கொடுக்காத பாரியளவிலான நிறுவனங்கள் மற்றும் சிறியளவிலான வர்த்தகர்கள் பற்றிய தகவல்களை நாட்டு மக்களுக்கு ஊடகவியலாளர்கள் வெளிப்படுத்த வேண்டும்.

சுவிஸ் விவகாரம்

சுவிஸ் தூதரக நிகழ்வுடன் தொடர்பான கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த ஜனாதிபதி, இவ் விடயம் தொடர்பில் சுவிஸ் தூதரகம் மேற்கொண்ட தலையீட்டினை நாம் தவறாக கருதவில்லை. தனது பணியாள் ஒருவருக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக அறிந்தவுடன் அது தொடர்பில் ஆராய வேண்டியது தூதுரகத்தின் பொறுப்பாகும்.

இந்த குற்றச்சாட்டில் எவ்வித உண்மையும் கிடையாது. இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கமைய மறுக்க முடியாத ஆதாரங்களினால் அது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதைத் தொடர்ந்து வெளிநாட்டு ஊடகங்களால் வெளியிடப்பட்ட செய்திகளின் ஊடாக இந்த நிகழ்வின் பின்னணியில் சூழ்ச்சி ஒன்று காணப்பட்டமை தெளிவாகின்றது.

பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தல், உண்மைத்தன்மையை கண்டறியாது போலிப் பிரசாரங்களை மேற்கொள்ளுதல் ஆகியன தற்போதைய அரசியல் கலாசாரத்தின் பிரதான அம்சங்களாகும். மக்கள் இந்த மோசமான நடத்தையினை மறுத்து வருகின்றனர். இந்த கலாசாரத்தினை இல்லாதொழிக்கவே நானும் முயற்சிக்கின்றேன்.

மாகாண சபைத் தேர்தல்

எதிர்வரும் மார்ச் மாதத்தில் பாராளுமன்ற பொதுத் தேர்தலை நடத்தியதன் பின்னர் மாகாண சபை தேர்தலை நடத்த எதிர்பார்த்துள்ளோம். 19வது அரசியலமைப்பு திருத்தம் காரணமாக அரசாங்கத்தினை கொண்டு செல்வதில் எதிர்நோக்கக்கூடிய சிரமங்களை கடந்த காலமே உறுதிப்படுத்தியுள்ளது. அரசியல் முதிர்ச்சி பெற்ற தலைவர்களால் அத்தகைய திருத்தமொன்று மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் நான் புதுமையடைகிறேன்.

அம்பாந்தோட்டை துறைமுகம் அதன் வர்த்தக நடவடிக்கைகளை விட தேசிய பாதுகாப்பு தொடர்பிலேய அதனை நான் நோக்குகிறேன். நாட்டின் அனைத்து துறைமுகங்களும் இலங்கை அரசாங்கத்தின் கீழ் செயற்பட வேண்டுமென்பதே எனது எண்ணமாகும்.

பாதுகாப்பு அமைச்சுடன் இணைந்து தமது எண்ணங்களை அன்றி உரிய விடயம் பற்றிய சரியான பிரகடனங்களை வெளியிடக்கூடிய ஊடக நிலையமொன்றினை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

நமது நிருபர்

Tue, 12/17/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை