அதிபர் சேவை ஆட்சேர்ப்பு முறைகேடு; பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளிப்பு

கடந்த ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற அதிபர் சேவை தரம் -3 க்கான ஆட்சேர்ப்பின்போது முறைகேடு இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றமை தொடர்பில் கல்வி அமைச்சர் டளஸ் அழகப் பெருமவுடன் உரையாடிய கடற்றொழில் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுத் தருவதாக உறுதியளித்தார்.  ஆட்சேர்ப்பில் பாதிக்கப்பட்டவர்கள் நேற்று (18) மாளிகாவத்தையிலமைந்துள்ள கடற்றொழில் அமைச்சிற்கு வருகை தந்து தமக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பில் அமைச்சரிடம் முறையிட்டனர். இதன்போது, நாடளாவிய ரீதியில் சுமார் 610 தமிழ்மொழி மூல வெற்றிடங்கள் இருக்கின்ற நிலையில் 167 பேர் மாத்திரமே உள்வாங்கப்பட்டுள்ளதாவும் மொழிவாரியாக ஆட்சேர்ப்பு நடைபெற வேண்டும் என்ற ஆட்சேர்ப்பு நியமங்களுக்கு மாறாக ஆட்சேர்ப்பு இடம்பெற்றமையினால் தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

கடந்த ஆட்சியிலிருந்தவர்களிடமும் கடந்த ஆட்சிக்கு ஒத்துழைப்பு வழங்கியவர்களிடமும் இதுதொடர்பாக முறையிட தாங்கள் முயற்சித்தபோதும் தங்களுடைய கோரிக்கையை அவர்கள் யாரும் கண்டு கொள்ளவில்லை என்ற ஆதங்கத்தையும் பாதிக்கப்பட்டவர்கள் வெளிப்படுத்தினர்.

உடனடியாக, கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெருமவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இவ் விடயம் தொடர்பில் கல்வி அமைச்சருக்கு தெரியப்படுத்தினார்.

ஆட்சேர்ப்பு தொடர்பாக ஆராய்ந்து நடவடிக்கை மேற்கொள்வதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்துவதாக கல்வி அமைச்சரினால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு உறுதியளிக்கப்பட்டது.

இதனையடுத்து, இவ் விடயம் தொடர்பாக தொடர்ந்தும் கவனம் செலுத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கான நியாயத்தை பெற்றுத் தருவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பாதிக்கப்பட்டவர்களுக்கு உறுதியளித்தார்.  

Thu, 12/19/2019 - 11:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை