மக்களுக்கு சலுகைகளை வழங்குவதற்காக திருத்தப்பட்ட சட்டங்கள் வர்த்தமானியில்

பாராளுமன்றம் ஆரம்பமாவதற்கு முன்னர் வெளியிட அரசாங்கம் தீர்மானம்

மக்களுக்குச் சலுகைகளை வழங்குவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தால் எடுக்கப்பட்டுள்ள முடிவுகளின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்டுவரும் சட்டத்திருத்தங்கள் பாராளுமன்றக் கூட்டத்தொடர் ஆரம்பமாகுவதற்கு இரண்டுவாரத்துக்கு முன்னர் வர்த்தமானியில் வெளியிடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் ஆளுங்கட்சியின் அமைச்சர்களுக்கும், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று நேற்றுமுன்தினம் இரவு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது.

இதன்போதே மேற்படி தீர்மானங்கள் எட்டப்பட்டுள்ளதுடன், அரசாங்கத்தின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து தீர்மானமிக்க கலந்துரையாடல்களும் நடத்தப்பட்டுள்ளன.

இந்திய விஜயம் தொடர்பில் இதன்போது ஜனாதிபதி அறிக்கையொன்றைச் சமர்ப்பித்து உரையாற்றியுள்ளார். அதேபோன்று சர்வதேச நாடுகளுடன் கடந்த அரசாங்கம் செய்துகொண்டிருந்த உடன்படிக்கைகள், இலங்கையில் உள்ள சுவிட்ஸர்லாந்து தூதரகத்தின் பணியாளர் கடந்தப்பட்ட விவகாரம், பிரித்தானிய கன்ஸவேட்டிவ் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இலங்கையில் இரண்டு தேசங்கள் அங்கீகரிக்கப்பட சர்வதேச அழுத்தம் கொடுக்கப்படுமென கூறப்பட்டுள்ள விடயம், குறைக்கப்பட்ட வரி சலுகைகளை மக்களுக்கு பயனுள்ள விதத்தில் அமுல்படுத்துவது உட்பட பல்வேறு விவகாரங்கள் தொடர்பில் கலந்துரையாட்டபட்டுள்ளன.

இந்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர் வாசுதேவ நாணாயக்கார,

சமகால அரசாங்கத்தால் முன்னெடுக்கபட்டவுள்ள முக்கிய விடயங்கள் குறித்து சந்திப்பில் அவதானம் செலுத்தப்பட்டது.

குறிப்பாக குறைக்கப்பட்டுள்ள வரி வகைகளை நடைமுறைப்படுத்தும் விதம் மற்றும் அதன் முழுமையான பயனை மக்கள் பெற்றுக்கொள்ளும் வகையில் நடைமுறைப்படுத்தல் தொடர்பிலும் ஆராயப்பட்டது.

அதேபோன்று கடந்த அரசாங்கத்தின் காலத்தில் நாட்டுக்கு பாதகமான முறையில் கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இதேவேளை, இந்தச் சந்திப்பு தொடர்பில் கருத்து வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில,

புதிய அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ள சலுகைகள் மக்களுக்கு கிடைக்கப்பெற பாராளுமன்றத்தில் சட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டியுள்ளது. அடுத்த மாதம் 3ஆம் திகதி பாராளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ளது.

அதற்கு இரண்டுவார காலத்துக்குள் குறித்த சட்ட மறுசீரமைப்புகள் வர்த்தமானியில் பிரசுரிக்கப்படுவது அரசியலமைப்பின் பிரகாரம் கட்டாயமாகும். பாராளுமன்றக் கூட்டத் தொடர் ஆரம்பமாவதற்கு இரண்டுவாரகாலப்பகுதிக்குள் மறுசீரமைக்கப்பட்டுவரும் அனைத்துச் சட்டங்களும் வர்த்தமானியில் பிரசுரிக்கப்படும் என்றார்.

 

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Thu, 12/05/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை