சாய்ந்தமருது தோணா சுத்திகரிப்பு; கழிவு அகற்றும்பணி முன்னெடுப்பு

சாய்ந்தமருது தோணா சுத்திகரிப்பின்போது தோண்டியெடுக்கப்பட்ட சல்பீனியாக்கள் மற்றும் திண்மக்கழிவுகளை அங்கிருந்து அகற்றும் பணிகள் கல்முனை மாநகர சபையினால் நேற்றுமுன்தினம் (15) முன்னெடுக்கப்பட்டது.

வெள்ள அனர்த்த அபாய நிலைமையை கருத்தில் கொண்டு கல்முனை மாநகர சபையும் அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையமும் இணைந்து சாய்ந்தமருது தோணாவை சுத்திகரிப்பு செய்யும் வேலைத்திட்டத்தை முன்னெடுத்திருந்தது.

கல்முனை மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப்பின் நேரடி கண்காணிப்பில் இப்பணி முன்னெடுக்கப்பட்டது.

இவ்வேலைத் திட்டத்தின் மூலம் தேங்கியுள்ள சல்பீனியாக்களும் பொது மக்களினால் வீசப்பட்டு நிரம்பியுள்ள திண்மக்கழிவுகளும் அகற்றப்பட்டு வருகின்றன.

தோணா சுத்திகரிப்பு செய்யப்பட்டு, ஆழமாக்கப்படுவதன் மூலம் வெள்ள நீர் கடலுக்கு செலுத்தப்படும். இதனால் சாய்ந்தமருது பிரதேசம் மாத்திரமல்லாமல் மாளிகைக்காடு, காரைதீவு போன்ற பிரதேசங்களும் பாரிய வெள்ளப்பெருக்கு அனர்த்தத்தில் இருந்து பாதுகாப்புப்பெறும் என சுட்டிக்காட்டப்படுகிறது.

கடந்த பல நாட்களாக பெய்து வந்த மழை காரணமாக கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியிருந்ததன் காரணமாக மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியிருந்தனர்.

இந்த வெள்ளப் பெருக்கைக் கட்டுப்படுத்த மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப் மற்றும் மாநகர ஆணையாளர் எம்.சி.அன்சார் ஆகியோரின் நேரடி வழிநடாத்தலில் மாநகர சபை ஊழியர்கள் இரவு, பகலாக பெரும் அர்ப்பணிப்புடன் முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் பிரகாரம் சாய்ந்தமருது பிரதேசத்திலும் பல்வேறு முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. சில தினங்களுக்கு முன்னர் தோணா- முகத்துவாரம் திறக்கப்பட்டதுடன் தோணாவின் சில இடங்களில் காணப்பட்ட பாரிய தடைகள் தோண்டி அகற்றப்பட்டிருந்தன.

வீதி வடிகான்களும் சுத்திகரிப்பு செய்யப்பட்டு வருகின்றன. சில வீடு, வளவுகளில் தேங்கி நிற்கின்ற வெள்ளம் நீர் இயந்திரங்கள் கொண்டு அகற்றப்பட்டு வருகின்றன.

Tue, 12/17/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை