இன்று முடிவு ; பிரெக்சிட் விவகாரத்தில் மக்கள் தீர்ப்பு

பிரிட்டிஷில் கடந்த மூன்று ஆண்டுகளில் இடம்பெறும் தீர்க்கமான மூன்றாவது பொதுத் தேர்தலில் நேற்று மக்கள் வாக்களித்தனர்.

2015 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற தேர்தல்களைத் தொடர்ந்து பிரிட்டிஷில் சுமார் 100 ஆண்டுகளுக்குப் பின் டிசம்பரில் இடம்பெறும் முதல் தேர்தலாகவும் இது இருந்தது.

இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்கொட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்தில் உள்ள 650 வாக்கு நிலையங்களில் அந்நாட்டு நேரப்படி நேற்றுக் காலை வாக்குப் பதிவு இடம்பெற்றது.

வாக்குப் பதிவு நேரம் முடிவுற்று விரைவில் வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பமாயின. பிரிட்டிஷ் நேரப்படி இன்று காலையாகும்போது பெரும்பாலான தேர்தல் முடிவுகள் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஒவ்வொரு தேர்தல் தொகுதிகளிலும் பெரும்பான்மை வாக்குகளை பெறுபவர்களைக் கொண்டு இந்தத் தேர்தல் மூலம் 650 எம்.பிக்கள் தேர்வுசெய்யப்படவுள்ளனர்.

இங்கிலாந்தில் சம்பிரதாயமாக நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறையே தேர்தல் இடம்பெறுகிறது. எனினும் கடந்த ஒருசில ஆண்டுகளுக்குள் மற்றொரு திடீர் பொதுத் தேர்தல் ஒன்றை நடத்துவதற்கு கடந்த ஒக்டோபரில் எம்.பிக்கள் ஆதரவாக வாக்களித்தனர். 1974 ஆம் ஆண்டுக்குப் பின் குளிர்காலத்தில் இடம்பெறும் முதல் தேர்தல் இதுவென்பதோடு, 1923 ஆம் ஆண்டுக்குப் பின் டிசம்பரில் இடம்பெறும் முதல் தேர்தலும் இதுவாகும்.

இதன்போது பிரிட்டிஷில் பெரும் பிரச்சினையை ஏற்படுத்தி இருக்கும் பிரெக்சிட் விவகாரம் குறித்து மில்லியன் கணக்கான பிரிட்டிஷ் மக்கள் தமது தீர்ப்பை வழங்குவதாகவும் இந்தத் தேர்தல் அமைந்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டிஷ் விலகுவது குறித்து பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் தொடர்ந்து இழுபறி நீடிக்கும் நிலையிலேயே இந்தத் தேர்தல் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. 2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற சர்வஜன வாக்கெடுப்பில் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுவதற்கு பிரிட்டிஷில் பெரும்பான்மையானவர்கள் ஆதரவாக வாக்களித்திருந்தனர்.

இதில் கடந்த ஆறு வாரங்களாக இடம்பெற்ற தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் பொரிஸ் ஜோன்சனின் கன்சர்வேடிவ் கட்சி மற்றும் ஜெரமி கோர்பியின் தொழிலாளர் கட்சி இரண்டும் மாறுபட்ட நிலைப்பாடு களை வெளியிட்டிருந்தன. குறிப்பாக ஒரு தசாப்தகாலமாக பிரிட்டிஷில் இடம்பெற்ற சிக்கன நடவடிக்கைகளுக்குப் பின் நாட்டை கட்டியெழுப்புவது மற்றும் முட்டுக்கட்டையில் இருந்து மீளுவது குறித்து இரு கட்சிகளும் தமது நிலைப்பாடுகளை வெளியிட்டிருந்தன.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விரைவாக வெளியேறுவதற்கு ஜோன்சன் விரும்பும் அதேவேளை, இந்த விவகாரம் குறித்து இரண்டாவது முறை சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவதற்கு கொர்பி விரும்புகிறார்.

55 வயது ஜோன்சன் மற்றும் 70 வயது கோர்பி இருவரினதும் பிரிட்டிஷின் இரண்டு பிரதான கட்சிகளுமே இந்தத் தேர்தலில் முன்னிலையில் உள்ளன. எனினும் இந்த இரு தலைவர்கள் மீதும் பிரிட்டிஷ் மக்களிடையே பரவலான சந்தேகங்கள் மற்றும் அதிருப்தி நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பிரெக்சிட் விவகாரம் தவிர, சுகாதார மற்றும் சமூக விவகாரங்கள், காலநிலை மற்றம் மற்றும் சட்ட ஒழுங்கு விவகாரங்கள் இந்தத் தேர்தலில் பிரதான பங்கு வகித்தன.

Fri, 12/13/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை