இலங்கைக்கு மேலும் நான்கு தங்கம்; கடற்கரை கரப்பந்தில் புதிய சாதனை

தெற்காசிய  விளையாட்டு போட்டி

நேபாளத்தில் நடைபெற்று வரும் 13 ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கை ஆடவர் மற்றும் மகளிர் கடற்கரை கரப்பந்தாட்ட அணிகள் தங்கம், வெள்ளிப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தது.

7 நாடுகள் பங்கேற்கும் தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளின் 8 ஆவது நாளில் 31 பதக்கங்களுக்கான போட்டிகள் இடம்பெற்றன. இதில் பொகாரா நகரில் நடைபெற்ற கடற்கரை கரப்பந்தாட்ட போட்டிகள் இலங்கைக்கு முக்கியமாக இருந்தது.

இதில் ஆடவர் மற்றும் மகளிர் இரு பிரிவுகளிலும் இறுதிப் போட்டியில் இலங்கை அணிகளே ஒன்றோடொன்று மோதிக் கொண்டன. இலங்கைக்கு இரு தங்கம், இரு வெள்ளிப் பதக்கங்கள் உறுதியாக இருந்த இந்தப் போட்டிகளில் ஆடவருக்கான கடற்கரை கரப்பந்தாட்டப் போட்டியில் இலங்கை 1 அணி மற்றும் இலங்கை 2 அணி மோதிக் கொண்டன.

இதில் இந்திக்க டிரோன் மற்றும் சனூஜ அணியை தோற்கடித்து அசங்க பிரதீப் மற்றும் அசேன் குமாரா ஆகிய வீரர்களைக் கொண்ட இலங்கை 1 அணி தங்கப் பதக்கம் வென்றது.

அதேபோன்று மகளிர் பிரிவில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இலங்கை 1 அணியில் தாருக்கா லக்சினி மற்றும் தினேஷ் பிரசாதினி இலங்கை 2 அணியான தீபிக்கா மற்றும் மதுசானி வீரசிங்க போட்டியிட்டனர்.

இதேவேளை, மல்யுத்தப் போட்டிகளில் இலங்கை நேற்று இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றது. பெண்களுக்கான 65 கிலோகிராம் எடைப் பிரிவில் டில்ஹானி வீரபாகு மற்றும் 72 கிலோகிராம் எடைப்பிரிவில் அயோமி செனவிரத்ன ஆகியோர் தங்கம் வென்றனர்.

இதன்படி இலங்கை நேற்று மொத்தம் 4 தங்கப் பதக்கங்களை வென்றது. இலங்கை பதக்கப் பட்டியலில் 35 தங்கப் பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தில் நீடிக்கிறது.

மகளிர் கிரிக்கெட் அணி வெள்ளி

பொகாரா நகரில் நேற்று நடைபெற்ற மகளிர் கிரிக்கெட் இறுதிப் போட்டியில் பங்களாதேஷுக்கு எதிராக கடைசி பந்து வரை போராடிய இலங்கை அணி 2 ஓட்டங்களால் தோல்வியை சந்தித்து வெள்ளிப் பதக்கத்துடன் ஆறுதல் அடைந்தது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட பங்களாதேஷ் அணி 20 ஓவர்களுக்கும் 8 விக்கெட்டுகளை இழந்து 98 ஓட்டங்களையே பெற்றது. அதிரடியாக பந்துவீசிய உமேஷா திமாசினி 7ஆவது ஓவரில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பதிலெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி முக்கிய இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறியது. இந்நிலையில் கடைசி ஓவருக்கு 7 ஓட்டங்களை எடுக்க வேண்டிய நிலையில் இலங்கை அணியால் 4 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

20 ஓவர்கள் முடுடிவில் இலங்கை அணி 9 விக்கெட்டுகளை இழந்து 89 ஓட்டங்களையே பெற்றது. அணித்தலைவி ஹர்சிக்கா மாதவி அதிகபட்சம் 32 ஓட்டங்களை பெற்றார்.

இதன்மூலம் பங்களாதேஷ் மகளிர் கிரிக்கெட் போட்டியில் தங்கப்பதக்கத்தை வென்றது.

இதேவேளை ஆண்களுக்கான கிரிக்கெட்டில் தங்கப் பதக்கத்திற்கான இறுதிப் போட்டியில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் 23 வயதுக்கு உட்பட்ட அணிகள் ஆடவுள்ளன. இந்தப் போட்டி இன்று கிட்பூரில் நடைபெறவுள்ளது.

இதற்கு முன்னதாக நேற்று நடைபெற்ற கடைசி குழுநிலை போட்டியில் இலங்கையின் இளம் அணி பங்களாதேஷை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலகுவாக வீழ்த்தியது.

முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட பங்களாதேஷ் அணி 20 ஓவர்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து 150 ஓட்டங்களை பெற்ற நிலையில் பதிலெடுத்தாடிய இலங்கை அணி 16.1 ஓவர்களில் 1 விக்கெட்டை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை எட்டியது. பத்தும் நிசங்க ஆட்டமிழக்காது 67 ஓட்டங்களையும் லசித் க்ரூஸ்புள்ளே ஆட்டமிழக்காது 73 ஓட்டங்களையும் பெற்றார்.

பளுதூக்களில் வெள்ளி

ஆண்களுக்கான 109 கிலோ கிராமிற்கு மேற்ப்பட்ட எடைப் பிரிவில் இலங்கையின் உஷான் சாருக்க வெள்ளிப் பதக்கம் ஒன்றை வென்றார். ஸ்னட்ச் பிரிவில் 140 கிலோகிராம் மற்றும் கிளீன் அன்ட் ஜார்க் பிரிவில் 180 கிலோகிராம் என மொத்தம் 320 கிலோகிராம் எடையை அவர் தூக்கினார்.

பாகிஸ்தானின் மொஹமது நூஹ் மொத்தம் 380 கிலோகிராம் எடையை தூக்கி தங்கம் தங்கப்பதக்கத்தை வென்றதோடு நேபாள வீரர் புகர் குருங் வெண்கலம் வென்றார்.

இதனிடையே பொகாரா நகரில் கடந்த 4 நாட்களாக நடைபெற்ற பளுதூக்கல் போட்டிகள் நேற்று நிறைவடைந்ததோடு இலங்கை இரண்டு தங்கப் பதக்கங்களை மாத்திரமே வென்றது.

முதல் முறை

கபடி இறுதியில் இலங்கை

காத்மண்டுவில் நடைபெற்றுவரும் கபடி போட்டியின் ஐந்தாவது நாளான நேற்று நடைபெற்ற போட்டியில் பங்களாதேஷ் அணியை தோற்கடித்து தங்கப் பதக்கத்திற்கான இந்தியாவுடனான இறுதிப் போட்டிக்கு இலங்கை தகுதி பெற்றுள்ளது.

தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் கபடி இறுதிப் போட்டிக்கு இலங்கை தகுதி பெற்றிருப்பது இது முதல் முறையாகும்.

இதில் பங்களாதேஷுக்கு எதிராக ஆரம்பம் தொடக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை கபடி அணி 35–20 புள்ளி அடிப்படையில் வெற்றியீட்டியது. மறுபுறம் ஆரம்பச் சுற்றில் தோல்வியுறாத அணியாக பங்களாதேஷ் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதன்படி தங்கப் பதக்கத்திற்கு இலங்கை மற்றும் இந்திய அணிகள் இன்று மோதவுள்ளன.

இதேவேளை நேற்று இடம்பெற்ற நீச்சல் போட்டிகளில் இலங்கை ஒரு தங்கப் பதக்கத்தைக் கூட வெல்லவில்லை. 200 மீற்றர் பெண்கள் மற்றும் ஆண்களுக்கான அஞ்சலோட்ட நீச்சல் போட்டியில் இலங்கை வெள்ளிப் பதக்கங்களையே வென்றது. ஆண்களுக்கான 200 மீற்றர் பட்டர்பிளை போட்டியில் சந்தேவ் செனரத்ன வெள்ளி வென்றார்.

தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் நீச்சல் போட்டிகள் இன்றுடன் நிறைவடைகிறது.

Mon, 12/09/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை