ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சாதாரண குற்றவாளிகளை விடுதலை செய்ய ஈரான் முடிவு

ஈரானில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள அப்பாவிகளை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி ஹஸன்ரூஹானி தெரிவித்துள்ளார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆனால் பாரிய குற்றங்கள் செய்யாதோரின் விடுதலையை வலியுறுத்தியுள்ள ஈரான் ஜனாதிபதி, பாரிய குற்றத்தில் ஈடுபட்டோரை சட்டத்தின் அடிப்படையில் நடத்த வேண்டுமென்றும் தெரிவித்தார்.

ஆக்ரோஷமாக கோஷம் எழுப்பியோர், வீதிகளில் டயர்களை எரித்தோரை விடுதலை செய்வது பற்றியே ஈரான் ஜனாதிபதி கருத்துத் தெரிவித்துள்ளார்.

எரிபொருட்களின் விலைகள் திடீரென உயர்ந்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நவம்பர் 15 இல் ஈரானில் நாடு தழுவிய பாரிய ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்த பலர் கைது செய்யப்பட்டதுடன் இன்னும் சிலர்மீது வழக்குத்தாக்கலும் செய்யப்பட்டது. ஆனால் கைதானோரின் தொகையை ஈரான் இன்னும் உத்தியோகபூர்வமாக அறிவிக்க வில்லை.

சுமார் 208 பேர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கொல்லப்பட்டதாக பிரிட்டனைத் தளமாகக் கொண்டு இயங்கும் மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

ஈரான் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளதுடன், பிரதான எதிரிகளான அமெரிக்கா, இஸ்ரேல், சவூதி அரேபியா ஆகிய நாடுகளே இந்த ஆர்ப்பாட்டங்களைத் தூண்டி விட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளது.மேலும் முஜாஹிதீன் அமைப்பையும் ஈரான் ஜனாதிபதி குற்றம் சாட்டினார்.

உள்நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தி ஈரானில் அரசியல் ஆதாயம் தேடும் எதிரிகளின் முயற்சி பலிக்காதென்றும் ஈரான் அரசு குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் சாதாரண குற்றவாளிகளை விடுதலை செய்யவுள்ள ஈரான் அரசு, துப்பாக்கிச் சூடு, ஆயுதம் ஏந்தல் போன்ற பாரிய குற்றங்களில் ஈடுபட்டோரை சட்டத்தால் தண்டிக்கவும் தீர்மானித்துள்ளது.இவர்களிடம் பெறப்படும் வாக்கு மூலங்களும், இந்த ஆர்ப்பாட்டத்துக்குப் பின்னால் நின்று செயற்பட்டோரின் தகவல்களையும் நேரடியாக ஒளிபரப்புச் செய்யவும் ஈரான் தீர்மானித்துள்ளது.

 

Thu, 12/05/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை