கடந்த அரசாங்கத்தின் அலட்சியப் போக்கே ஈஸ்டர் தாக்குதலுக்கு முக்கிய காரணம்

கடந்த அரசாங்கத்தின் 5 வருட காலத்தில் முப்படை வீரர்களுக்கும் இழைக்கப்பட்ட அநீதி மற்றும் அவர்களுக்கெதிரான அவமானத்தை நிவர்த்தி செய்வதற்கு நீதி நிலைநாட்டப்படுமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். பயங்கரவாதத்தை இல்லாதொழித்து நாட்டில் மீள பயங்கரவாதம் தலைதூக்காதிருக்க வழிசெய்தவர்கள் அவர்களே என குறிப்பிட்ட பிரதமர், நாட்டில் அதன் பின்னர் கடந்த அரசாங்கத்தின் காலத்திலேயே பயங்கரவாதம் இடம் பெற்றுள்ளது. படை வீரர்களை வேட்டையாடியதால் அது மீள தலைதூக்கியது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தியத்தலாவை இராணுவ முகாமில் இடம்பெற்ற விசேட நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ஈஸ்டர் தாக்குதல் போன்று பாரிய பயங்கரவாத தாக்குதல் ஒன்று ஆசியாவின் வேறெந்த நாடுகளிலும் இடம்பெற்றதில்லை. அதனை தடுப்பதற்கான வழிவகைகள் இருந்தபோதும் அதனைச் செய்யமுடியாமல் போனமைக்கு காரணம் அந்த அரச நிருவாகம் மேற்படி தாக்குதல் தொடர்பில் கிடைத்த தகவல்களை அலட்சியப்படுத்தியமையே.

மேற்படி தாக்குதலினால் நாடு பெரும் பொருளாதார பின்னடைவுக்கு முகங்கொடுக்க நேர்ந்தது. சுற்றுலாத்துறைக்கும் சுற்றுலாத்துறை ஹோட்டல்களுக்கும் பெரும் பின்னடைவு ஏற்பட்டது. இதுவரை காலம் எதிர்கொள்ள நேர்ந்த அனைத்து சவால்களையும் வெற்றிகொண்டுள்ள நாம் இந்த சவாலையும் வெற்றிகொள்வது உறுதி என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். (ஸ)

 

Mon, 12/23/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை