உண்மையைக் கண்டறிவதில் இராஜதந்திர மட்டத்தில் முயற்சி

சுவிஸ் தூதரக பணியாளர் விவகாரம்

ஆளடையாளத்தை அறியாமல் நாட்டைவிட்டுச் செல்ல அனுமதிக்க முடியாது - அமைச்சர் தினேஷ்

சர்ச்சைக்குள்ளாகியுள்ள சுவிஸ் தூதரக பணியாளர் தொடர்பான தகவல்கள் முன்னுக்குப் பின் முரணானதாகவுள்ளபோதும் அதனை இராஜதந்திர ரீதியில் விசாரித்து உண்மைநிலையை வெளிப்படுத்துவதில் அரசாங்கம் தீவிரமாக செயற்பட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன நேற்று தெரிவித்தார்.

இதேவேளை, ஆள் அடையாளம் உறுதிப்படுத்தப்படாத எவரையும் மறைமுக செயற்பாடுகள் மூலம் நாட்டைவிட்டு வெளியேற அனுமதிக்க முடியாது என்பதில் அரசாங்கம் உறுதியாக இருப்பதாகவும் அவர் ஆணித்தரமாக கூறினார்.

பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண் பணியாளரும் அவரது குடும்பத்தாரும் இருக்கும் இடம் எமக்குத் தெரியாது என்கின்ற போதும் அவர்கள் தற்போது நாட்டுக்குள் பாதுகாப்பாக இருப்பதாக சுவிஸ் தூதுவர் எம்மிடம் தெரிவித்தார். அப்பெண் எங்கு இருக்கின்றார் என்பது தெரியாமல் எவ்வாறு எம்மால் பாதுகாப்பு வழங்க முடியும் எனக் கேள்வி எழுப்பிய அமைச்சர் குணவர்தன, அப்பெண்ணை நேரில் வந்து வாக்குமூலம் வழங்குமாறு கேட்டுக்கொண்டதுடன் அதற்கான பாதுகாப்பை வழங்குவதாக உத்தரவாதம் அளித்தார்.

சுவிஸ் தூதரக பணியாளர் பற்றிய முழுமையான விசாரணைகளை முன்னெடுப்பதற்கு பாதிக்கப்பட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள பெண் ஊழியரின் வாக்குமூலம் அவசியம் என்பதை உலக நாடுகளுக்கு வலியுறுத்தும் வகையில் வெளிவிவகார அமைச்சர் நேற்று கொழும்பிலுள்ள வெளிநாட்டு தூதரகங்களின் தூதுவர்களையும் உயர்ஸ்தானிகர்களையும் அமைச்சில் சந்தித்து வலியுறுத்தினார். இதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது புதிய அரசாங்கத்தில் வெளிவிவகார அமைச்சரினால் நடத்தப்பட்ட முதலாவது செய்தியாளர் மாநாடாகும்.

"இலங்கைக்கான சுவிஸ் தூதுவர் பெற்றுத் தந்த தகவல்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டே தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண் ஊழியர் தொடர்பிலான எவ்வித விவரங்களும் எமக்கு பெற்றுத் தரப்படவில்லை. சுவிஸ் தூதுவர் வழங்கிய தரவுகளும் ஒன்றுக்குப் பின் முரணானவை. வாக்குமூலம் பெறுவதற்காக சிஐடியினர் அவரது இருப்பிடம் நோக்கிச் சென்ற போது அவர்கள் குடும்பத்தோடு அங்கிருந்து வெளியேறியுள்ளனர். இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் அவரை வாக்குமூலம் வழங்குமாறு நாம் சுவிஸ் தூதுவரிடம் பல தடவைகள் வலியுறுத்தி வருகின்றோம். எனினும், அவர் அதற்கு மறுப்புத் தெரிவிக்கவில்லை. மாறாக வாக்குமூலம் அளிக்கும் மனநிலையில் இந்த ஊழியர் இல்லை என்று அவர் எமக்குத் தெரிவிக்கின்றார்," என்றும் அமைச்சர் கூறினார்.

"சர்ச்சைக்குள்ளாகியுள்ள ஊழியர் பற்றிய ஆள் அடையாளம் இன்னமும் உறுதிபடுத்தப்படாத நிலையில், அவர் மன அழுத்தத்துக்கு உள்ளாகியிருப்பதாக சுவிஸ் நாட்டு வைத்தியர் ஒருவர் வெளியிட்ட கடிதமொன்றை இலங்கைக்கான சுவிஸ் தூதுவர் எம்மிடம் சமர்ப்பித்துள்ளார். குறிப்பிட்ட வைத்தியர் பாதிக்கப்பட்ட பெண்ணை வீடியோ காட்சி மூலம் பரிசோதித்ததாக எமக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் ஊழியருக்கு சிகிச்சையளிப்பதற்காக அவரையும் அவரது குடும்பத்தாரையும் ஆகாய அம்பியுலன்ஸ் மூலம் சுவிட்சர்லாந்துக்குச் செல்ல அனுமதிக்குமாறும் சுவிஸ் தூதுவர் எம்மிடம் கோரியுள்ளார். சுவிட்சர்லாந்துக்கான இலங்கை தூதுவர் அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சரை சந்தித்தபோதும் இதே கோரிக்கையையே அவர் முன்வைத்துள்ளார். என்றபோதும் அரசு என்ற வகையில் பெயர், கடவுச்சீட்டு இலக்கம் உள்ளிட்ட எந்தவொரு விடயமும் தெரியாத ஆள் அடையாளம் உறுதிப்படுத்தப்படாத ஒருவரை பிறர் முன்வைக்கப்படும் காரணங்களுக்காக குடியகல்வு சட்ட திட்டங்களை மீறி நாட்டைவிட்டுச் செல்ல அனுமதிக்க முடியாது," என்றும் அவர் தெரிவித்தார்.

எனினும், இப்பெண் ஊழியர் எதிர்வரும் 09 ஆம் திகதிக்கு முன்னர் வாக்குமூலம் அளிக்க வேண்டுமென்றும் நீதிமன்றத்தின் உத்தரவின்றி நாட்டை விட்டுச் செல்ல முடியாதென்றும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கும் நிலையில், அப்பெண் தனக்கு நடந்தது என்னவென்பதை தெரியப்படுத்துவதற்காக வாக்குமூலம் அளிக்க முன்வருவார் என நம்புகின்றோமென்றும் அமைச்சர் நம்பிக்கை

வெளியிட்டார்.

"சுவிஸ் தூதரக பெண் ஊழியர் அச்சுறுத்தப்பட்ட சம்பவம் நவம்பர் 25 ஆம் திகதி இடம்பெற்றதாக கூறப்படுகின்றது. எனினும் 27 ஆம் திகதி காலை அனைத்து வெளிநாட்டுச் செய்திகளிலும் இச்செய்தி வெளியாகியிருந்தது. அப்படியானால், 26 ஆம் திகதி இச்செய்தி வெளிநாட்டு ஊடகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 27 ஆம் திகதி காலை சுவிஸ் தூதுவர் என்னைச் சந்திக்க நேரம் கேட்டிருந்தார். அதற்கமைய அவர் எங்களைச் சந்தித்தபோதே இச்சம்பவம் தொடர்பில் எமக்குத் தகவல் தந்தார். அவர் வழங்கிய நேரம், இடம் ஆகிய தகவல்களைக் கொண்டு அக்கணமே உடனடி விசாரணையை ஆரம்பிக்குமாறு பதில் பொலிஸ் மாஅதிபருக்கு வெளிவிவகார அமைச்சு உத்தரவு பிறப்பித்தது. தகவல் கிடைத்தது முதல் அரசாங்கம் சிறிதும் தாமதிக்காமல் இச்சம்பவம் குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளது," என்றும் அமைச்சர் விளக்கமளித்தார்.

தேர்தலுக்கு முன்னர் இந்த அரசாங்கம் மீது சேறு பூசியவர்களே தற்போது எதிர்க்கட்சியிலிருந்தபடி ஜனாதிபதியின் ஆட்சிக்கு களங்கத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். அதனால், இச்சம்பவம் தொடர்பான முழுமையான விசாரணைகள் முடிவடையும் வரை உண்மையைத் திரிபுபடுத்தும் வகையிலான பிரசாரங்களை முன்னெடுக்காது ஊடகங்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டுமென்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

 

லக்ஷ்மி பரசுராமன்

Thu, 12/05/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை