பொதுமக்களுக்கான சேவைகளில் முறைகேடுகள் இடம்பெறக்கூடாது

சேவையை பெற்றுக்கொள்வதற்காக அரச நிறுவனங்களுக்கு வருகைதரும் எந்தவொரு நபரையும் அசௌகரியத்திற்கு உள்ளாக்காது உடனடியாக சரியான மற்றும் வினைத்திறனான சேவையை பெற்றுக்கொடுப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவது அனைத்து அரச ஊழியர்களதும் பொறுப்பாகுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.  

அதேநேரம் சேவைகளை வழங்கும்போது எந்தவிதமான முறைக்கேடுகளும் இடம்பெறுவதற்கு இடமளிக்கக் கூடாது என்றும் தெரிவித்தார்.  

மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்திற்குச் சொந்தமான வேரஹெர அலுவலகத்திற்கு (26) திடீர் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.  

புகைப்படம் எடுப்பது முதல் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் வரையிலான அனைத்து பிரிவுகளையும் ஜனாதிபதி பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளிட்ட அலுவலக பணிக்குழாமினரை சந்தித்து நிறுவனத்தின் செயற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.  

நேரம் அனைவருக்கும் மிகவும் பெறுமதியானதாகும். எனவே சேவை பெறுநர்களுக்கு உடனடியாக தமது தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். தொழில்வல்லுனர்களைப் போன்று சாதாரண மக்களுக்கான சேவையையும் உடனடியாக நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.  

சேவையொன்றை பெற்றுக்கொள்வதற்காக வருகை தருகின்ற ஒருவருக்கு அதனை பொறுப்பேற்ற நேரத்தை குறிப்பிட்டு, மீண்டும் அதனைப் பெற்றுக்கொள்ள வர வேண்டிய நேரத்தையும் அறிவிப்பது முக்கியமானதாகும். அதன் மூலம் நிறுவனத்தில் வீணாக நேரத்தைக் கழிக்காது தங்களுடைய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு மக்களுக்கு முடியுமாக இருக்கும்.  

ஊழல், மோசடிகளுக்கு இடமளிக்காதிருப்பதற்கு அனைத்து அதிகாரிகளும் உறுதியாக செயற்பட வேண்டும். ஊழியர் வெற்றிடங்கள் இருக்குமானால் 54,000பட்டதாரிகளிலிருந்து பொருத்தமானவர்களை அதற்காக தெரிவுசெய்ய முடியும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.  

நடைமுறையிலுள்ள முறைமைகள் ஒரு மாத காலப்பகுதியில் மாற்றப்பட வேண்டும். அதனைக் கண்காணிப்பதற்காக தான் மீண்டும் வருகை தருவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். 

Sat, 12/28/2019 - 09:38


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை