​ேநட்டோ இலக்குகளுக்குள் எதிரிகள் ஊடுருவலைத் தடுக்க புதிய வியூகம்

லண்டன் மாநாட்டில் தலைவர்கள் உறுதி

நேட்டோ அமைப்பின் எழுபதாவது மாநாடு நேற்று பிரிட்டன் தலைநகர் லண்டனில் ஆரம்பமானது.

பிரிட்டன், பிரான்ஸ், ஜேர்மன், கனடா உள்ளிட்ட முக்கிய பல நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற இந்த மாநாட்டுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ரம்ப் வருகை தந்தார். நேட்டோ அமைப்பை வளப்படுத்த உறுப்பு நாடுகள் அதிகளவு நிதியைச் செலவிட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்ப்,நேட்டோ அமைப்பில் பிரதான பங்கு வகிக்கும் அமெரிக்காவின் இராணுவ வியூகங்களைப் பலப்படுத்த உறுப்பு நாடுகள் போதியளவு நிதியைச் செலவிடவில்லை எனவும் குற்றம் சாட்டினார். ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்த அதிகளவு நிதியைச் செலவிட்டதாக இந்த அமைப்பிலுள்ள சிரேஷ்ட நாடுகள் குறிப்பிட்டன.மேலும் பொதுவான பாதுகாப்பு விடயங்களில் புதிதாக அங்கத்துவம் பெற்ற நாடுகள் ஆலோசனை வழங்குவதை ஏற்க முடியாதெனவும் இத்தலைவர்கள் தெரிவித்தனர்.நேட்டோவின் சிரேஷ்ட நாடுகள் முன்மொழிந்த விஷேட பாதுகாப்பு செயன்முறைகளில்

சில நாடுகளை சேர்த்துக் கொள்ள முடியாதென பிரிட்டன், பிரான்ஸ், தலைவர்கள் தெரிவித்தனர்.

மேலும் வளர்ந்து வரும் சீனாவின் இராணுவக் கட்டமை ப்பு, நவீன இணையங்களூடாக ஐரோப்பிய நாடுகளை கண்காணிக்கும் சீனாவின் நடத்தைகளுக்கும் இம் மாநாட்டில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. துருக்கியின் எழுமாந்தமான போக்குகள் குறித்தும் ஆராயப்பட்டதுடன் குர்திஷ் போராளிகளுக்கு துருக்கி வழங்கும் உதவி குறித்தும் மாநாடு கவனம் செலுத்தியது. மேலும் ரஷ்யாவுக்கு எதிரான நாடுகளைப் பாதுகாக்கும் நேட்டோவின் புதிய பாதுகாப்பு வியூகங்களுக்கு துருக்கி கண்டனம் தெரிவித்ததை இம்மாநாடு முற்றாக நிராகரித்தது.

நேட்டோவின் இந்த மாநாட்டில் சிரியாவில் இடம்பெறும் உள்நாட்டு யுத்தத்தில் துருக்கியின் தலையீடு மற்றும் துருக்கிக்கான ரஷ்யாவின் மறைமுக உதவிகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டு, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளின் கூட்டுக்குச் சமமாக ஐரோப்பாவை வளர்க்கும் புதிய வியூகங்களும் பலப்படுத்தப்பட்டன. வான், தரை, கடல், இணையங்களூடாக எதிரி நாடுகள் நேட்டோவைக் கண்காணிக்கும் முறைகளைத் தடுப்பதற்கான உபாயங்களும் மேற்கொள்ளப்பட்டன. 2014 இல் நேட்டோ அமைப்பு இணங்கியவாறு இந்நாடுகளின் வருமானத்தில் இரண்டு வீதத்தை பாதுகாப்புக்கு வழங்குவதற்கு 29 நாடுகளும் இணக்கம் தெரிவித்தன. மத்திய கிழக்கு, ஆபிரிக்கா மற்றும் ஜேர்மனியையும் இணைத்து நேட்டோவைப் பலப்படுத்தவும் இங்கு ஆலோசிக்கப் பட்டது. நேட்டோவின் மூளை இறந்து விட்டதாகத் தெரிவித்த பிரான்ஸ் ஜனாதிபதியின் கருத்தை வாபஸ் பெற வலியுறுத்திய சில தலைவர்கள் கடந்த காலங்களில் உலக அமைதி, சமாதானத்திற்கு நேட்டோ வழங்கிய அர்ப்பணிப்புக்களையும் சுட்டிக்காட்டினர்.

Thu, 12/05/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை