மாற்றமடையாத தேசிய போக்குவரத்து கொள்கையை தயாரிக்க நடவடிக்கை

அரசாங்கம் மாறும்போது மாற்றமடையாத தேசிய போக்குவரத்து கொள்கையொன்றை தயாரிப்பதற்கு அமைச்சின் மூலம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக போக்குவரத்து சேவைகள், மின்சாரம் மற்றும் மின்வலு அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

நேற்று முன்தினம் கொழும்பு கோட்டை ரயில் நிலைய நடவடிக்கைகளை ஆராய சென்றிருந்த போதே இவ்வாறு குறிப்பிட்டார். முதலில் கண்டி புகையிரத நிலையத்துக்கு சென்று அங்குள்ள குறைபாடுகள், பொதுமக்களின் முறைப்பாடுகள் தொடர்பாக ஆராய்ந்தார்.

அதனை தொடர்ந்து கண்டியிலிருந்து கொழும்பு கோட்டைவரை புகையிரதத்தில் பயணம் செய்து ரயில் சேவையில் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகள் தற்போதுள்ள குறைபாடுகள் தொடர்பாக பொதுமக்களிடம் வினவினார்.

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்துக்கு வருகை தந்த அமைச்சர் அங்கு அனைத்து பிரிவுக்கும் சென்று நடவடிக்கைகளை கண்காணித்ததோடு ரயில் நிலையத்தில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பாகவும் புதிதாக செயற்படுத்த வேண்டிய பிரிவுகள் தொடர்பாகவும் அதிகாரிகளின் கருத்தை வினவினார். அதன் பின்னர் கருத்துத் தெரிவித்த அமைச்சர்,

தற்போது இலங்கையில் தேசிய போக்குவரத்து கொள்கைகள் இல்லாமை பெரும் குறையாகும். அதனால் புதிய அரசாங்கங்கள் பதவிக்கு வரும்போதும் மாற்றமடையாத தேசிய போக்குவரத்து கொள்கையொன்றை எதிர்காலத்தில் தயாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது தொடர்பில் அறிஞர்கள்,நிபுணர்கள், பல துறைகளை சார்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரது கருத்துகளையும் அறிந்து பாராளுமன்ற உறுப்பினர்களின் துணையுடன் கொள்கையை தயாரிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளேன் என்றார்.

Tue, 12/17/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை