அரச நிறுவனங்களை வினைத்திறன் மிக்கதாக்க பல்வேறு தீர்மானங்கள்

பொதுத்தேர்தலில் 2/3 பெரும்பான்மை பெறும் வகையில் செயற்திட்டம்

பொதுத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொள்ளும் வகையில் ஜனாதிபதியின் செயற்பாடுகளும் தீர்மானங்களும் அமைந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

பல சட்டங்களை மறுசீரமைக்க வேண்டியுள்ளதுடன் அரச நிறுவனங்களை வினைத்திறன்மிக்கவையாக மாற்றியமைப்பதற்கான தீர்மானங்களே அண்மைய நாட்களாக எடுக்கப்பட்டு வருவதாகவும் இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

லேக்ஹவுஸ் நிறுவனத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

நட்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களை இலாபமீட்டும் நிறுவனங்களாக மாற்றியமைப்பதற்கான பல தீர்மானங்களை ஜனாதிபதி எடுத்துள்ளார்.

ஜனாதிபதியின் செயற்பாடுகளுக்கு மக்களும் சிறந்த ஒத்துழைப்பையும் அங்கீகாரத்தையும் வழங்கி வருகின்றனர்.

அரச நிறுவனங்களின் முதலாவது பொறுப்பானது அமைச்சரவை எடுக்கும் தீர்மானத்தின் பிரகாரம் செயற்படுவதாகும்.

ஜனாதிபதி கோட்டாய ராஜபக்ஷதான் 5 வருடங்களுக்கு ஜனாதிபதியாக இருக்கப்போகிறார்.

அதில் எவ்வித மாற்றமும் இல்லை. பொதுத் தேர்தலில் ஜனாதிபதித் தேர்தலை விட கூடிய பலத்தை நாம் பெறுவோம். மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொள்வதற்கான செயற்பாடுகளை  நாம் முன்னெடுத்து வருகின்றோம். பல சட்டங்களை மறுசீரமைக்க வேண்டியுள்ளது.

குறிப்பாக நாம் 12 முக்கிய தீர்மானங்களை எடுத்துள்ளோம்.

வற் வரி குறைப்பு உட்பட பல வரிகளை குறைத்துள்ளோம். வாசனை திரவியங்கள் மற்றும் சிறு ஏற்றுமதிப் பயிர்களின் இறக்குமதிக்கும் மீள் ஏற்றுமதிக்கும் தடை வித்துள்ளோம். அதன் காரணமாக 350 ரூபாவாகவிருந்த மிளகு ஒரு கிலோவின் விலை இன்று 750 ரூபாவாக உயர்ந்துள்ளது.

கடந்த காலத்தில் உள்நாட்டு உற்பத்தி வீழ்ச்சி கண்டிருந்தது. நாம் மீண்டும் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதற்கான செயற்பாடுகளையே முன்னெடுத்து வருகிறோம்.

சிறிய மற்றும் நடுத்தர விவசாயிகள் மற்றும் வர்த்தகர்கள் பெற்றுக்கொண்டுள்ள கடன்களுக்கான அறவீடுகளை உடனடியாக நிறுத்துமாறு ஜனாதிபதி பணித்துள்ளார்.

கடந்த காலத்தில் இவர்களிடம் அதிகளவான வரியும், வட்டியும் அறவீடு செய்யப்பட்டன. இதனால் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் பாரிய சுமைகளுக்கு உள்ளாகியதுடன், உற்பதிகளை செய்ய முடியாது, செய்த உற்பத்திக்கான சந்தை வாய்ப்பை பெற்றுக்கொள்ள முடியாதும் இருந்தனர்.

என்றாலும், வற் வரி உட்பட பல வரி சலுகைளை அரசாங்கம் வழங்கியதால் வங்கிகள் பாரிய சேமிப்பை ஈட்டிக்கொள்ள முடிந்துள்ளது.

குறிப்பாக சில வங்கிகள் 3 பில்லியன் வரையான சேமிப்பை ஈட்டியுள்ளன. ஆகவே, அதன் ஒரு பகுதியை மக்களுக்கு கொடுக்க முடியும். மக்கள் வங்கி எதற்கு உருவாக்கப்பட்டது? மக்களுக்கு சேவை வழங்கவேயன்றி மாறாக வருமானத்தை ஈட்டிக்கொள்ள அல்ல.

இந்த விடயத்தில் வங்கிகளுக்கு ஏதும் பிரச்சினையென்றால் அவற்றை மத்தியஸ்தம் வகித்து தீர்த்துவைக்க அரசாங்கம் தயாராகவுள்ளது என்றார்.

 

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Tue, 12/24/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை