மட்டு. மேற்கு கல்வி வலய ஆசிரிய இடமாற்றங்களில் அநீதி

மண்முனை மேற்கு பிரதேச சபை தவிசாளர் சண்முகராசா

இடைநிறுத்த வேண்டுமென கிழக்கு ஆளுநரிடம் முறையீடு

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்கான ஆசிரிய இடமாற்றங்களில் அநீதிகள் இடம்பெற்றுள்ளன, அதனை இடைநிறுத்த வேண்டுமென மண்முனை மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் எஸ்.சண்முகராசா தெரிவித்தார். நேற்றுமுன்தினம் கிழக்கு மாகாண ஆளுநர் திருமதி அனுராதா யஹாப்பத்தை அவரது செயலகத்தில் சந்தித்து முறையிட்டுள்ளார்.

அவர் இதுபற்றி ஊடகங்களுக்கு தெரிவிக்கையில், கல்வியை படிப்படியாகவே கட்டியெழுப்ப வேண்டும். அதற்கு முறையான திட்டமிடலும், சீரான மேற்பார்வையும் தேவை. இச் செயற்பாட்டுக்கு ஆசிரியர்களின் பங்கு பிரதானமானது.

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம், கடந்த பல ஆண்டு காலமாக ஆசியர்கள் பற்றாக் குறையினால், பாதிக்கப்பட்ட வண்ணம் இருந்துவருகிறது.

இங்கு ஒரு தேசியப் பாடசாலைகூட இல்லை. 2020ம் ஆண்டிற்கான ஆசிரிய இடமாற்றத்தில் 128 ஆசிரியர்கள் அவ்வலயத்திலிருந்து இடமாற்றம் பெறுகிறார்கள். அவர்களுக்குப் பதிலாக 28 ஆசிரியர்களே உள்வாங்கப்பட இருக்கிறார்கள். இதனால் 100 ஆசிரிய வெற்றிடங்கள் இங்கு உள்ளது. ஏற்கனவே ஆசிரிய பற்றாக்குறை உள்ள ஒரு கல்வி வலயத்திற்கு மேலும் மேலும் ஆசிரியர்களுக்கான பற்றாக்குறையை தோற்றுவிப்பது அநீதியானது. மாகாணக் கல்வித் திணைக்களம் கண்ணை மூடிக் கொண்டு காரியங்களை ஆற்றுகிறது.

ஆதலால், இதனை ஆளுநரிடம் முறையிடுவதைத் தவிர வேறுவழி எமக்குத் தெரியவில்லை. மாகாண கல்விப் பணிப்பாளரிடம் இதை முறையிட்டிருக்கலாம். அவரிடம் செல்வதில் பிரயோசனமில்லை. பிழையைச் செய்தவரிடம், அந்த பிழையைச் சுட்டிக்காட்டி நியாயம் கேட்பது பொருத்தமாகாது என்றார்.

புளியந்தீவு குறூப் நிருபர்

Fri, 12/20/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை